india
பொதுத்தேர்வில் ஃபெயில்… நீட் தேர்வில் 705… குஜராத் மாணவி கொடுத்த ஷாக்..
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் இயற்பியல் மற்றும் வேதியியலில் தோல்வியடைந்த மாணவி மருத்துவர் நீட் தேர்வில் மட்டும் 705 மதிப்பெண்கள் பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மருத்துவ கலந்தாய்வுக்கு நுழைய நீட் தேர்வு அவசியம் என்ற நிலை உருவாகி இருக்கிறது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 50% மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே போதும் என்பதால் பல மாணவ, மாணவிகள் நீட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் இத்தேர்வில் ஊழல்களும் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
அதிலும் இந்த வருஷ நீட் தேர்வு தாள் கசிந்த விவகாரம் இன்னும் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில் இன்னொரு அதிர்ச்சி சம்பவமும் தற்போது வெளியாகி இருக்கிறது. குஜராத்தை சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வில் 720க்கு 705 பெற்று இருந்தார். இந்த மாணவி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முக்கிய பாடமான வேதியல் மற்றும் இயற்பியலில் 31 மற்றும் 21 மதிப்பெண்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக எல்லா அரசுகள் போலவும் குஜராத்தும் 12-ம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மீண்டும் மறு தேர்வு நடத்தும். அதிலும் இந்த மாணவி கலந்து கொண்டிருக்கிறார். அதில் வேதியலில் இரண்டு மதிப்பெண்கள் கூடி 33 மதிப்பெண்ணும் மற்றும் இயற்பியலில் ஒரே மார்க் அதிகரித்து 22 மதிப்பெண் மட்டுமே பெற்று இருக்கிறார்.
ஆனால் இதே நேரத்தில், நீட் தேர்வில் இம்மாணவி வேதியியல் மற்றும் இயற்பியலில் 99.14 மற்றும் 99.89 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இந்தியா முழுவதிலும் இருக்கும் எந்த கல்லூரியில் வேண்டுமானாலும் அவருக்கு மருத்துவ சீட் கிடைக்க இருந்த நிலையில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் அவரால் சேர முடியாத நிலை உருவாகி இருக்கிறது. இதனால் அம்மாணவி மீண்டும் நீட் தேர்வு எழுத வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.