Connect with us

india

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விஷயத்தில் மௌனம் காப்பது ஏன்?.. ஜேபி நட்டா கேள்வி..

Published

on

jp natta

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கர்ணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 58 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த வாரம் இந்த செய்தி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பல வருடங்களாக சாராயம் அருந்தி வருகிறார்கள்.

ஆனால், கடந்த புதன் கிழமை சாராயம் அருந்திய பின் உடல்நிலை பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் அரசு மருத்துவமனை மற்றும் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் பலரும் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒவ்வொருவராக இறக்க துவங்க கர்ணாபுரம் பகுதி சோக மயமானது. திரும்பி பக்கமெல்லாம் மரண ஓலம் கேட்டது.

10 பேருக்கு கண் பார்வை போய்விட்டது. இதைத்தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி சிபிசிஐடி போலீசார் சாராயம் விற்ற சிலரை கைது செய்தனர். மேலும், சாராயத்தில் கெட்டுப்போன மெத்தனாலை கலந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மெத்தனால் ஆந்திராவிலிருந்து புதுச்சேரிக்கு கொண்டு செல்லப்பட்டு அதன்பின் காய்ச்சப்பட்ட சாராயத்தில் கலந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அதில் தொடர்புடைய சிலரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஒருபக்கம், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அதிமுக, பாஜக கட்சிகள் போர்க்கொடி தூக்கி இருக்கிறது. இந்நிலையில், ‘கள்ளக்குறிச்சி விஷச்சார விஷயத்தில் பலர் உயிரிழந்தும் காங்கிரஸ் மௌனம் காப்பது ஏன்?’ என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், துறை அமைச்சரை நீக்கவும், சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க தமிழக முதல்வருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன்னா கார்கே அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

google news