latest news
வீட்டில் இருந்தே மதுவை டோர்டெலிவரி செய்யும் திட்டமில்லை… டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு…
தமிழகத்தில் மதுவை ஆன்லைன் ஆப் மூலம் டெலிவரி செய்யும் திட்டம் பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல் பரவிய நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறது.
தமிழகத்தில் ஒரு பக்கம் மதுவிலக்கு கோரிக்கை தொடர்ந்து மக்களிடம் எழுந்து வருகிறது. இருந்தும் ஒரு பக்கம் டாஸ்மாக்கில் மது விற்பனை நாளுக்கு நாள் கோடி கணக்கில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் டாஸ்மாக்கில் இருந்து மதுவை டோர் டெலிவரி செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டது.
ஏற்கனவே, மகாராஷ்டிரா, சட்டிஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இத்திட்டம் செயல்முறையில் இருக்கும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
மது மற்றும் புகையிலை நுகர்வோர்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடாது என்பதே சுகாதாரத் துறையின் விதியாக இருக்கிறது. ஆனால் அதை சோமேட்டோ, ஸ்விக்கி மூலம் டெலிவரி செய்யும் தமிழக அரசின் திட்டத்திற்கு தற்போது எதிர்ப்பு குரல் எழுந்து வரும் நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு செய்தியை வெளியிட்டு இருக்கிறது.
அதில், ஒயின், பீர் உள்ளிட்ட மதுபானங்களை மூலம் சோமேட்டோ, ஸ்விக்கி மூலம் டெலிவரி செய்யும் திட்டம் இல்லை. அதுமட்டுமல்லாமல் 90மில்லி மதுபானத்தை விற்பனை செய்யவும் டாஸ்மாக் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் கூறப்பட்டிருக்கிறது. இணையத்தில் உலா வரும் செய்தி வதந்தி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.