india
லோன் – இன்சூரன்ஸ் பாலிஸி உடனே கிடைக்கும்… அதிர்ச்சி கொடுத்த போலி கால் சென்டர்!
வங்கிக் கடன் மற்றும் காப்பீடு கொடுப்பதாக வாடிக்கையாளர்களுக்கு போன் செய்து மோசடியில் ஈடுபட்ட கும்பலை நொய்டா போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
டெல்லியை அடுத்த நொய்டா செக்டர் 51 பகுதியில் இயங்கி வரும் மார்க்கெட்டில் ஒரு அறையில் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பலின் போலி கால் சென்டர் செயல்படுவதாக போலீஸுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடி ரெய்டு நடத்திய போலீஸ், அந்த கும்பலை சேர்ந்த ஆஷிஷ் குமார் என்கிற அமித், உள்ளிட்ட 3 பேர் கைஉது செய்யப்பட்டனர்.
இந்த கும்பலுக்கு அமித் மூளையாகச் செயல்பட்டதும், அவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.காம் படித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. செல்போன் நிறுவன வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடி, அவர்களுக்கு போன் செய்து பேசி வங்கிக் கடன் மற்றும் இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்க முயன்றதும் தெரியவந்துள்ளது.
இதற்காகக் குறிப்பிட்ட தொகையை கட்டணமாகப் பெற்ற அந்த கும்பல், வங்கிக் கடனோ காப்பீடோ பெற்றுத் தராமல் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்கு முன்னர் அமித், ஒரு பொதுத்துறை வங்கியின் காப்பீட்டுப் பிரிவில் பணியாற்றியவராவார். வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பெற்றபிறகு கர்நாடகாவில் இருக்கும் அமித்தின் வங்கிக் கணக்குக்கு அந்தப் பணத்தை இந்த கும்பல் உடனடியாக மாற்றிவிடுமாம்.
லோன் பெற்றுத் தருவதாக வாடிக்கையாளர்களை நம்ப வைக்க பெண் ஒருவரையும் இவர்கள் பணிக்கு அமர்த்தியிருக்கிறார்கள். அவரை கமிஷன் அடிப்படையில் பணியமர்த்தியிருப்பதையும் போலீஸார் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுபோன்ற லோன் அல்லது இன்சூரன்ஸ் பாலிஸி தொடர்பாக போன் வந்தால் வாடிக்கையாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.