india
சாதி வாரி கணக்கெடுப்பு தேவை…பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ள ராமதாஸ்…
நாடு முழுவதும் அடுத்த மாதங்களில் மேற்கொள்ளப் படவிருக்கும் 2021ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரி கணக்கெடுப்பாக நடத்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். சமூக நீதி காக்கப்பட இந்த ரீதியான கணக்கெடுப்பு தேவை எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடிக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கடிதம் அனுப்பியுள்ளார், அந்த கடிதத்தில் இந்தியா அனைத்து துறைகளிலும் உலக நாடுகளுடன் போட்டிபோட்டுக் கொண்டு முன்னேறி வருகிறது என்பதில் எந்தவித ஐயத்திற்கும் இடமில்லை, அதே நேரத்தில் சமூக நீதியைக் காப்பதில் பல்லாண்டுகளாக போடப்பட்டு வரும் முட்டுக்கட்டைகளை அகற்றுவது மட்டும் எட்டாக்கனியாகவே உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அளவிலும், மாநில அலவிலும் இட ஒதுக்கீட்டிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர் நீதிமன்றத்திலும் , உச்சநீதி மன்றத்திலும் பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளன.
இட ஒதுக்கீட்டின் நியாயத்தை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்களிலும் நிரூபிக்க சாதி வாரி மக்கள் தொகை புள்ளி விவரங்கள் தேவை. ஆனால் அது நம்மிடம் இல்லை என்றும் தனது கடிதத்தில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை எதிர்கொள்ள சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
இதையே பல்வேறு தருணங்களில் உச்ச நீதிமன்றமும், உயர் நீதி நீதிமன்றங்களும் வலியுறுத்தியுள்ளன என்பதாலும் அடுத்த சில மாதங்களில் மேற்கொள்ளப்பட இருக்கும் 2021ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரியானதாக எடுக்க வேண்டும், இதற்கான வறலாற்றுச் சிறப்பு மிக்க ஆணையை பிறப்பிக்க வேண்டும் என தான் கேட்டுக்கொள்வதாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.