latest news
பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது… விக்கிரவாண்டி மக்களுக்கு முதல்வர் நன்றி!
பரபரப்பாக நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா வெற்றிப்பெற்று இருக்கிறார். இந்த வெற்றியை பரிசளித்த அந்த தொகுதி மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து இருக்கிறார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் அபிநயா டெபாசிட் இழந்தார். பாமகவின் வேட்பாளர் ஜிகே மணியை திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு நன்றி கூறும் பொருட்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
அதிலிருந்து, தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் முன்னேற்றத்துக்கு திமுக தான் என்றும் தேவை என்பதை இந்த இடைத்தேர்தல் மூலமாக சொன்ன விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அமைச்சர் க.பொன்முடி, எஸ்.ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட அமைச்சர்கள், இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆகியோருக்கும் நன்றி.
இதே நேரத்தில் இந்தியா முழுமைக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் இண்டியா கூட்டணி 13 சட்டமன்ற இடைத்தேர்தலில் 11ல் வெற்றி பெற்று இருக்கிறது. பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வெற்றியாக திமுக வரலாற்றில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி அமைந்துள்ளது.
மக்கள் கொடுத்த இந்த வெற்றி எங்களுக்கு உற்சாகத்தையும், எழுச்சியையும் தந்துள்ளது. அதேசமயத்தில் கூடுதல் பொறுப்பை கொடுத்திருக்கிறது. திமுக அரசு செய்து வரும் சாதனை திட்டங்களுக்கு மகுடம் சூடுவதாக இந்த வெற்றி உள்ளது. மக்கள் எங்களோடு இருக்கிறார்கள். மக்களோடு இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.