india
வயநாட்டு நிலச்சரிவில் இதுவரை 157 பேர் உயிரிழப்பு… 216 பேரை காணவில்லை…
கேரளா மாநிலம் வயநாட்டில் நேற்று நடந்த நிலச்சரிவில் எக்கசக்க உயிரிழப்பு நடந்துள்ள நிலையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் உச்சத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கேரள வயநாடு மாவட்டத்தின் முண்டக்கை, மேம்பாடி கிராமங்களில் நேற்று அதிகாலை இரண்டு முறை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் மண்ணுக்குள் புதைந்தனர். தமிழ்நாடு மற்றும் பெங்களூரில் இருந்து பேரிடர் குழுவினர் மீட்புப்பணியில் போராடி வருகின்றனர்.
இதில் 130க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். நள்ளிரவில் நடந்த நிலச்சரிவு என்பதால் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதுவரை 157 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மேலும், 216 பேரை காணவில்லை எனவும் கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் பகுதிகளில் இன்றும் கனமழை பெய்யும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் நிலச்சரிவு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.