latest news
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்!.. உண்மையான குற்றவாளிகள் யார்?!… ஒரு பார்வை!..
கள்ளக்குறிச்சி கருணாபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பலரும் அப்பகுதியில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்ததில் பலருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதில், 3 பேர் இறந்து போனார்கள். அவர்களின் இறுதிச்சடங்குளில் கலந்து கொண்ட பலரும் அதே கள்ளச்சாராயத்தை வாங்கி குடிக்க பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
வாந்தி, மயக்கம், வயிற்று வலி உள்ளிட்ட பல காரணங்களால் அவதிப்பட்டு கள்ளக்குறிச்சி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி ஒவ்வொருவராக இறந்து போனார்கள். மருத்துவமனையில் போதிய இடம் இல்லாதால் அதில் சிலர் சேலம், திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளுக்கும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து பலி என்ணிக்கை அதிகரித்துகொண்டே போனது. 19ம் தேதி 17 பேரும், 20ம் தேதி 24 பேரும், 21ம் தேதி 9 பேரும் என 50 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் கர்ணாபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆந்திராவிலிருந்து கெட்டுப்போன மெத்தனாலை வாங்கி புதுச்சேரிக்கு கொண்டு வந்து அங்கிருந்து கல்வராயன் மலைக்கு கொண்டு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சி கர்ணாபுரம் பகுதியில் விற்பனை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களையும், மெத்தனால் வாங்கி வந்தவரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். தற்போது பலி எண்ணிக்கை 7 ஆகி மொத்த எண்ணிக்கை 57ஆக உயர்ந்திருக்கிறது.
இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லாமே சாராயத்தை விற்றவர்கள். சாராயத்தை காய்ச்சுபவர்கள் வேறு. அதை வாங்கி வந்து பாக்கெட் போட்டு விற்பவர்கள் வேறு. சாரயாத்தை காய்ச்ச தேவைப்படும் மூலப்பொருட்களை போலீசாருக்கு தெரியாமல் கொண்டு வருவதற்கு பின்னால் அரசியல் கட்சியினை சேர்ந்தவர்கள் இருப்பார்கள், மாவட்ட செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ என பலரும் இருப்பார்கள்.
ஆனால், கள்ளச்சாராய சாவு என வரும்போது அதை விற்பவர்களை மட்டுமே அரசு கைது செய்யும். இறந்துபோனவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்கும். ஆனால், முக்கிய குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள். அவர்கள் லிஸ்ட்டிலேயே இருக்கமாட்டார்கள். தனது கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் அரசும் அவர்களை கைது செய்யாது. கள்ளக்குறிச்சி விஷயத்திலும் இதுதான் நடந்திருக்கும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களில் பலரும் சமூகவலைத்தளங்களில் சொல்லி வருகிறார்கள்.