கருணாநிதி, ஸ்டாலினுக்கு டஃப் பைட் கொடுத்தவர் உதயநிதிக்கு எதிராக போட்டி.. ஜெயலலிதா 1991ல் 2 தொகுதிகளில் போட்டியிட்ட சென்டிமென்டை பின்பற்றும் விஜய்? அதிமுக சார்பில் களமிறங்கும் ஆம்ஸ்ட்ராங் மனைவி.. சென்னையில் மீண்டும் வளர்மதி, கோகுல இந்திரா.. 3 முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அலசல்..!

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வரும் வேளையில், தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு ஒரு புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அக்கட்சியின் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது அரசியல் ரீதியாக ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. 1991ஆம் ஆண்டு செல்வி ஜெயலலிதா 2 தொகுதிகளில் களம் கண்டு வெற்றி பெற்ற வரலாற்றை இது நினைவுபடுத்துகிறது. விஜய்யின் இந்த முடிவு வெறும் சென்டிமென்ட் மட்டுமல்லாமல், நகர்ப்புற வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவை ஒருங்கிணைக்கும் ஒரு திட்டமிட்ட வியூகமாகவும் மூத்த பத்திரிகையாளர்களால் கணிக்கப்படுகிறது.

விஜய் தனது தேர்தல் களமாக பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கை தேர்ந்தெடுத்ததற்கு பின்னால் பல்வேறு சமூக மற்றும் அரசியல் காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் ரசிகர் மன்றத்தை சேர்ந்த சுமார் 40,000 உறுப்பினர்கள் வாக்காளர்களாக இருப்பது அவருக்கு பெரும் பலமாக கருதப்படுகிறது. அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் வாக்குகள் கணிசமாக இருப்பதும், அந்த தொகுதியின் நகர்ப்புற தன்மை விஜய்க்கு சாதகமாக அமையும் என்பதும் தவெக தரப்பின் எதிர்பார்ப்பாக உள்ளது. இருப்பினும், திருச்சி கிழக்கில் திமுக சார்பில் போட்டியிடும் இனிகோ இருதயராஜ் போன்ற வலுவான வேட்பாளர்களை விஜய் எவ்வாறு எதிர்கொள்வார் என்பது சவாலான ஒன்றாகவே இருக்கும்.

தவெகவின் மற்ற முக்கிய வேட்பாளர்களை பார்க்கும்போது, பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தியாகராய நகர் தொகுதியிலும், ராஜ்மோகன் எழும்பூரிலும், ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியிலும் களம் இறங்குகின்றனர். வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவு. ஆயிரம் விளக்கு தொகுதியில் ஜே.சி.டி பிரபாகரன் ஆகியோர் தவெக சார்பில் களம் காண்பது அந்த தொகுதிகளை நட்சத்திர தொகுதியாக மாற்றியுள்ளது. ஜே.சி.டி பிரபாகரன் ஏற்கனவே எம்.எல்.ஏ-வாக இருந்தவர் என்பதால், அவருக்கு இருக்கும் தொகுதி பரிச்சயம், ஆதவ் அர்ஜுனாவுக்கு இருக்கும் பணபலம் ஆகியவை கடுமையான போட்டியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தியாகராய நகரில் அதிமுகவின் சத்யாவுக்கு இருக்கும் செல்வாக்கு புஸ்சி ஆனந்திற்கு ஒரு கடும் சவாலாக அமையும்.

அதிமுகவைப் பொறுத்தவரை, அதன் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் பல ஆச்சரியங்களை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக, படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு திரு.வி.க நகர் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது அந்த பகுதியில் நிலவும் அனுதாப அலை மற்றும் தலித் சமூக வாக்குகளை அதிமுக பக்கம் திருப்பும் ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது. அதேபோல், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா போன்றவர்களுக்கு சென்னையில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது, சென்னையை திமுகவின் கோட்டை என்ற பிம்பத்திலிருந்து மீட்டெடுக்க அதிமுக எடுக்கும் தீவிர முயற்சியைக் காட்டுகிறது.

சென்னையின் மற்ற தொகுதிகளான வேளச்சேரி, சைதாப்பேட்டை மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகியவற்றிலும் கடுமையான போட்டி நிலவுகிறது. வேளச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் ஹசன் மௌலானா போட்டியிட வாய்ப்பு உள்ளது. அவருக்கு எதிராக அதிமுகவின் அசோக் களம் காண்பது ஒரு நேருக்கு நேர் மோதலாக இருக்கும். சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அதிமுகவின் ஆதிராஜாராம் நிறுத்தப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. ஆதிராஜாராம் கடந்த காலங்களில் கருணாநிதி மற்றும் ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட்டு டஃப் பைட் கொடுத்தவர் என்பதால், இம்முறை உதயநிதிக்கு தேர்தல் களம் அவ்வளவு எளிதாக இருக்காது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இந்த தேர்தல் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிட அணிகளுக்கு இடையிலான பிரதான போட்டியாக இருந்தாலும், விஜய்யின் தவெக மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை வாக்குகளை பிரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். குறிப்பாக, நாம் தமிழர் கட்சி நான்கு பிராமண வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது ஒரு புதிய சமூக மாற்றமாக பேசப்படுகிறது. வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கு, தொகுதிகளின் சாதி சமன்பாடுகள் மற்றும் ஆளுங்கட்சி மீதான அதிருப்தி ஆகிய காரணிகள் இந்தத் தேர்தலின் முடிவை தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Leave a Comment