தமிழக அரசியல் களத்தில் சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்று அதிமுகவிற்காக நடத்திய ரகசிய கருத்துக்கணிப்பு, அந்த கட்சியின் தலைமையையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை, திமுக அரசின் மீதான அதிருப்தி அலை தங்களுக்கு சாதகமாக மாறும் என்றும், நூலிழையில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்றும் அதிமுக கணக்கு போட்டிருந்தது. ஆனால், நடிகர் விஜய் தேர்தல் பிரச்சார களத்தில் இறங்கிய ஒரே வாரத்தில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பின்படி, அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியில் விஜய் மிகப்பெரிய ஓட்டையை போட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. குறிப்பாக, அதிமுகவின் பலமாக கருதப்படும் பெண் வாக்காளர்கள் பெருமளவில் விஜய்யின் பக்கம் சாய்ந்துள்ளனர். இதனால், அதிமுக மெஜாரிட்டி பெறுவது என்பது எட்டாக்கனியாகிவிட்டது. “விஜய் ஆட்சியைப் பிடிக்கிறாரோ இல்லையோ, நிச்சயம் அதிமுகவை ஆட்சி கட்டிலில் அமர விடமாட்டார்” என்ற கசப்பான உண்மையை இந்த ரிப்போர்ட் உரக்க சொல்கிறது.
பொதுவாக, ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு செல்வதுதான் வழக்கம். ஆனால், இப்போது விஜய் ஒரு “மூன்றாவது துருவமாக” உருவெடுத்துள்ளதால், அந்த எதிர்ப்பு வாக்குகள் சிதறுகின்றன. இது மறைமுகமாக திமுகவிற்கு சாதகமாக அமையக்கூடும் என்ற அச்சம் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு ஏற்பட்டுள்ளது. விஜய்யின் வாக்கு சேகரிப்பு அதிமுகவின் வாக்கு வங்கியை சிதைத்து, 3வது இடத்திற்கு தள்ளக்கூடுமா? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மொத்தத்தில் தமிழக அரசியல் இப்போது ஒரு வினோதமான மும்முனை போட்டியைச் சந்தித்து வருகிறது. விஜய்யின் அரசியல் வருகை என்பது வெறும் ஒரு நடிகரின் வருகையல்ல, அது தமிழகத்தின் இரு பெரும் திராவிடக் கட்சிகளின் தலையெழுத்தையே மாற்றப்போகும் ஒரு புயல் என்பது மட்டும் உறுதி.