தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை புரட்சித் தலைவர் எம்ஜிஆருடன் ஒப்பிட்டுப் பேசிய செங்கோட்டையன் மற்றும் தவெக நிர்வாகிகளை அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
செங்கோட்டையனுக்குக் கண்டனம்:
கே.பி. முனுசாமி, “புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்குப் பிறகு புரட்சித் தளபதி விஜயாம்! இதையெல்லாம் சொல்ல செங்கோட்டையனுக்கு வெட்கமாக இல்லையா? 50 ஆண்டுகாலம் அதிமுகவில் அனைத்து சுகங்களையும் அனுபவித்து, பலமுறை அமைச்சராக இருந்து, நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம், கல்லூரிகள் எனப் பொருளாதாரத்தில் உயர இந்தக் கட்சிதான் காரணம். இவ்வளவு காலம் எல்லா பலன்களையும் அனுபவித்துவிட்டு இப்போது அங்கே போய் நிற்கிறார்கள்,” என்று செங்கோட்டையனைச் சாடினார்.

சந்தர்ப்பவாதிகளின் புகலிடம் தவெக:
விஜய் கட்சியை ‘கலப்படக் கட்சி’ என்று விமர்சித்த அவர், “விஜய் இன்னும் ஆட்சி அதிகாரத்திற்கே வரவில்லை, அதற்குள் அது தூய்மையான கட்சி என்று எப்படிச் சொல்ல முடியும்? அங்கே இருப்பவர்கள் எல்லாம் எங்கே வாய்ப்பு கிடைக்கும், எங்கே வசதி கிடைக்கும் என்று அலையும் சந்தர்ப்பவாதிகள். குறிப்பாக கொள்கை பரப்புச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ஏற்கனவே திமுக, விசிக என ஒரு ரவுண்டு அடித்துவிட்டு இப்போது இங்கே வந்திருக்கிறார். அவர் அதிமுகவிற்கும் வரப் பார்த்தார், ஆனால் உழைப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் இந்தக் கட்சியில் அவரால் இடம்பிடிக்க முடியவில்லை,” என்று தெரிவித்தார்.
ஈபிஎஸ் – உழைப்பின் அடையாளம்:
அதிமுகவின் பலத்தைப் பற்றிக் குறிப்பிட்ட முனுசாமி, “எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு குக்கிராமத்தில் இருந்து வந்து, தனது கடின உழைப்பால் இந்தப் பொறுப்பிற்கு உயர்ந்துள்ளார். ஆனால் விஜய்யைச் சுற்றி இருப்பவர்களோ கருத்தியல் இல்லாத, சுயநலத்திற்காகக் கட்சி மாறியவர்கள். இது போன்ற கலவையான மனிதர்கள் இருக்கும் தவெக ஒருபோதும் தூய்மையான கட்சியாக இருக்க முடியாது,” என்று ஆவேசமாகப் பேசினார்.