அமித்ஷா – விஜய் சந்திப்பில் உடன் இருந்த 5 பேர்.. விஜய்க்கு 2 இன்ப அதிர்ச்சிகள் ஒரு எச்சரிக்கை கொடுத்தாரா அமித்ஷா? எச்சரிக்கை தான் மிகவும் முக்கியமானது.. ஒரு மணி நேர மீட்டிங் இருதரப்புக்கும் திருப்தி என தகவல்.. தமிழ்நாட்டுக்கு தேவையானதை தடையின்றி கொடுத்தால் பாஜக பக்கம் தவெக சாயவும் வாய்ப்பு.. மக்கள் நலன் முக்கியம்.. அதற்கு பிறகு தான் கொள்கை எதிரி எல்லாம் என விஜய் நினைப்பதாக தகவல்…
சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டுக்கு முந்தைய நாள், தமிழக முதலமைச்சர் விஜய், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தனிப்பட்ட முறையில் சந்தித்ததாகவும், சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் டெல்லி பத்திரிகையாளர் ராஜகோபாலன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது அமித்ஷாவுடன் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள், ஒரு ஐபிஎஸ் அதிகாரி மற்றும் அரசியல் விவகாரங்களில் அனுபவம் கொண்ட இருவர் என மொத்தம் ஐந்து பேர் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பில் முதலமைச்சர் விஜய்க்கு இரண்டு முக்கியமான தகவல்களும், ஒரு பாதுகாப்பு எச்சரிக்கையும் தெரிவிக்கப்பட்டதாக ராஜகோபாலன் தெரிவித்துள்ளார். அதில் முதலாவது தகவல் தமிழகத்தின் முக்கிய நதிகளை இணைக்கும் திட்டம் தொடர்பானது என கூறப்படுகிறது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள முக்கிய நதிகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்றும், இதற்காக உலக வங்கியின் மூலம் மிகப்பெரிய அளவில் நிதி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமித்ஷா தெரிவித்ததாக கூறப்படுகிறது. மத்திய அரசு, மாநில அரசு மற்றும் வெளிநாட்டு நிதி உதவி ஆகியவற்றின் மூலம் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் தமிழகத்தின் நீர்வளப் பிரச்சினைகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றும், குறிப்பாக காவிரி நீரை சார்ந்திருக்கும் நிலை கணிசமாக குறையக்கூடும் என்றும் சந்திப்பில் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாவது முக்கிய தகவல், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் தொடர்பானது என கூறப்படுகிறது. அந்த வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு அமித்ஷா சாதகமாக பதிலளித்ததாகவும் ராஜகோபாலன் தெரிவித்துள்ளார். சில முக்கியமான நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு காத்திருப்பதாகவும், அந்த விவகாரங்கள் முடிவடைந்த பின்னர் திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமித்ஷா உறுதியளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, இலங்கை துறைமுகத்தில் இருந்து செயல்படும் சீனக் கப்பல் ஒன்று தென்னிந்திய கடற்பகுதிகளை கண்காணித்து வருவதாகவும், குறிப்பாக கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பான கவனம் அதிகரிக்க வேண்டும் என்றும் அமித்ஷா எச்சரித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அவ்வப்போது பாதுகாப்பு அறிக்கைகளை பெற்று மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் அனைத்தும் டெல்லி பத்திரிகையாளர் ராஜகோபாலன் தெரிவித்த பேட்டி அடிப்படையிலானவை; அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் அல்ல. இருப்பினும், விஜய்–அமித்ஷா இடையேயானதாக கூறப்படும் இந்த ஒரு மணி நேர சந்திப்பு தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.