”அரசியலில் எதற்கும் ரியாக்ட் செய்யாமல் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் மக்கள் உங்களை நம்பி ஆட்சிப் பொறுப்பை வழங்க மாட்டார்கள்” என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை நேரடியாகச் சவால் விடுத்துள்ளார்.
விஜய்யின் வசனத்தால் வந்த வினை:
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, விஜய்யின் அரசியல் மௌனம் குறித்துக் காட்டமாக விமர்சித்தார். அவர் கூறியதாவது,
“கம்முனு இருப்பாரோ கும்முனு இருப்பாரோ.. ஆனால் பேச வேண்டிய இடத்தில் விஜய் பேசியே ஆக வேண்டும். ‘கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருக்கணும், கும்முனு இருக்க வேண்டிய இடத்தில் கும்முனு இருக்கணும்’ என்று விஜய் தான் ஒருமுறை சொன்னார். ஆனால் அரசியலில் அப்படி இருக்க முடியுமா? மௌனமாக இருப்பதால் மட்டும் ஒரு நல்ல அரசியல்வாதியாக மாறிவிட முடியாது.”
வேடிக்கை பார்த்தால் வெற்றி கிடைக்காது:
தமிழகத்தில் நிலவும் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து விஜய் குரல் கொடுக்காததைச் சுட்டிக்காட்டிய அண்ணாமலை, “இன்று தமிழகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் நடக்கின்றன. எதைக் கண்டும் பேசாமல் நான் வேடிக்கை மட்டும் பார்ப்பேன் என்றால், உங்களை நம்பி மக்கள் எப்படி ஆட்சிப் பொறுப்பை வழங்குவார்கள்? சரியைச் சரி என்றும், தவறைத் தவறு என்றும் வெளிப்படையாகச் சொல்லப் பழகுங்கள் விஜய். அப்போதுதான் நீங்கள் ஒரு முழுமையான அரசியல்வாதியாக முடியும்” என்று ஆக்ரோஷமாகத் தெரிவித்தார்.
புதுச்சேரி அரசியல் குறித்து விமர்சனம்:
விஜய் சமீபத்தில் புதுச்சேரி சென்றிருந்தபோது, சிறுபான்மையினர் குறித்துப் பேசியதற்கும் அண்ணாமலை பதிலடி கொடுத்தார். “புதுச்சேரியில் சிறுபான்மையினர் குறித்துப் பேசும் விஜய், திருப்பரங்குன்றத்தில் பெரும்பான்மை மக்களுக்காக ஏன் பேசவில்லை? புதுச்சேரி மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மை தெரியும். தேர்தல் களத்தில் மோதுவோம், நியாயமான விஷயங்களுக்கு ஒன்றிணைவோம்” என்றும் அண்ணாமலை கூறினார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜய்யின் தவெக மற்றும் பாஜக இடையே மறைமுகமாகத் தொடங்கி இருக்கும் இந்த வார்த்தைப் போர், அரசியல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.