மெல்லச் சாகும் ஒருநாள் போட்டிகள்.. 2027-க்கு பிறகு ODI இருக்குமா?.. அஸ்வின் கவலை..

2027-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் (ODI) எதிர்காலம் மற்றும் அதன் முக்கியத்துவம் கேள்விக்குறியாக உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கவலை தெரிவித்துள்ளார்.

தனது யூடியூப் சேனலில் இது குறித்து விரிவாகப் பேசிய அஸ்வின், ஒருநாள் போட்டிகள் தற்போது மெல்லச் சாகும் நிலையை (Slow Death) நோக்கிச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

ரோஹித் – கோலி என்ற பிம்பம்:
உள்ளூர் ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே டிராபி குறித்துப் பேசிய அவர், “விஜய் ஹசாரே தொடரை விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் விளையாடியதால் தான் மக்கள் தேடி வந்து பார்த்தனர். விளையாட்டு வீரர்களை விட விளையாட்டு தான் பெரியது என்று நாம் சொன்னாலும், சில நேரங்களில் விளையாட்டைப் பிரபலப்படுத்த இதுபோன்ற ஜாம்பவான்கள் தேவைப்படுகிறார்கள். ஒருவேளை இவர்கள் இருவரும் ஓய்வு பெற்றுவிட்டால், ஒருநாள் போட்டிகளின் நிலை என்னவாகும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐசிசி-க்கு அஸ்வின் வைக்கும் கோரிக்கை:
டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கு வழங்கப்படும் அதே முக்கியத்துவத்தை ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கும் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இது குறித்து அவர் கூறுகையில்,

FIFA மாடல்:
“கால்பந்து உலகக் கோப்பையைப் போல, ஒருநாள் உலகக் கோப்பையை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் நடத்தி, இடைப்பட்ட காலத்தில் லீக் போட்டிகளுக்கு முக்கியத்துவம் தரலாம். அப்போதுதான் அந்தத் தொடர் மீதான எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கும்.”

வருமானமே குறிக்கோளா?
“தற்போது ஐசிசி வருமானத்திற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஒரு உலகக் கோப்பையை நடத்துவது போல் தெரிகிறது. இது ஒரு விதத்தில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அலுப்பைத் தரும் (Overkill) விஷயமாகிவிடும்.”

மாறிப்போன ஆட்டத்தின் போக்கு:
முன்னாள் கேப்டன் தோனி போன்ற வீரர்கள் ஆட்டத்தின் போக்கை மெதுவாகக் கொண்டு சென்று கடைசியில் அதிரடி காட்டும் விதம் ஒருநாள் போட்டிகளுக்கே உரிய அழகாகும். ஆனால், தற்போது இரண்டு புதிய பந்துகள் மற்றும் களத்தடுப்பு விதிகள் (Field Restrictions) காரணமாக ஒருநாள் போட்டிகள் அதன் தனித்துவத்தை இழந்து வருவதாக அஸ்வின் சுட்டிக்காட்டியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் இன்றும் தனது மதிப்பைக் தக்கவைத்திருப்பதாகக் கூறிய அவர், ஒருநாள் கிரிக்கெட் மட்டும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு இடையில் சிக்கித் தவிப்பதாகத் தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார்.

Leave a Comment