யார் குரலையும் நாங்க ஒடுக்கல!.. ஜனநாயகன் பட சர்ச்சைக்கு பாஜக கொடுத்த ‘நச்’ விளக்கம்!

தமிழக மக்களின் நலன் குறித்தோ, தமிழ் மொழி மீதான பற்று குறித்தோ பேசுவதற்கு ராகுல் காந்தி எங்களுக்குச் சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை” என்று பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் குரு பிரகாஷ் பாஸ்வான் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகன் பஞ்சாயத்தும் பாஜக விளக்கமும்:
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் சிக்கலால் முடங்கியுள்ள விவகாரம், தற்போது தேசிய அளவில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. “மத்திய பாஜக அரசுதான் திட்டமிட்டுப் படத்தைத் தடுக்கிறது” என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய குரு பிரகாஷ் பாஸ்வான் கூறியதாவது,

“பாஜக ஒருபோதும் யாருடைய குரலையும் ஒடுக்கியது கிடையாது. ஜனநாயகத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஒரு திரைப்படம் தணிக்கை செய்யப்படுவது என்பது தன்னாட்சி அமைப்பான சென்சார் போர்டின் விதிகளுக்கு உட்பட்டது. இதில் அரசியல் உள்நோக்கம் கற்பிப்பது ராகுல் காந்தியின் அறியாமையையே காட்டுகிறது.”

தமிழ் மொழி மீது மோடியின் மரியாதை:
பிரதமர் மோடிக்குத் தமிழ் மொழி மற்றும் தமிழர் பண்பாடு மீது அளவற்ற மரியாதை உண்டு என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “பிரதமர் மோடி ஐநா சபை வரை சென்று தமிழ் மொழியின் சிறப்பைப் பேசுகிறார். காசி தமிழ்ச் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் கலாச்சாரத்தைக் கொண்டாடுகிறார். தமிழகத்தின் வளர்ச்சிக்காகப் பல்வேறு மத்திய அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உண்மை நிலை இப்படி இருக்க, ராகுல் காந்தி அரசியல் ஆதாயத்திற்காகப் பொய்களைப் பரப்ப வேண்டாம்,” என்றார்.

ராகுலுக்குப் ‘பொளேர்’ பதிலடி:
மேலும் பேசிய அவர், “தமிழர் நலன் குறித்து பாஜகவுக்கு ராகுல் காந்தி பாடம் எடுக்கத் தேவையில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழகம் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டது என்பதை மக்கள் மறக்கவில்லை. தேர்தல் வரும்போது மட்டும் தமிழ் பற்று பேசுவது ராகுல் காந்தியின் வாடிக்கையாகிவிட்டது,” என விமர்சித்தார்.

‘ஜனநாயகன்’ பட விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ள நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே வெடித்துள்ள இந்த வார்த்தைப் போர் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment