நான்தான் முடிவு செய்வேன்!.. ஜனநாயகன் பட மேல்முறையீட்டு வழக்கில் தலைமை நீதிபதியின் ‘நச்’ பதில்

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரம், தனி நீதிபதியின் உத்தரவு, சென்சார் போர்டின் மேல்முறையீடு என இன்று (ஜனவரி 9, 2026) சென்னை உயர்நீதிமன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

தனி நீதிபதியின் அதிரடி உத்தரவு:
இன்று காலை 10.30 மணியளவில் இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, படத்திற்கு உடனடியாகத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஏற்கனவே 27 மாற்றங்களுடன் ‘UA 16+’ சான்றிதழ் வழங்கத் தீர்மானிக்கப்பட்ட நிலையில், தனிநபர் புகாரால் படத்தைத் தள்ளிவைப்பது ஏற்கத்தக்கதல்ல என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். இது விஜய் ரசிகர்களிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது.

சென்சார் போர்டு ‘திடீர்’ மேல்முறையீடு:
தனி நீதிபதியின் தீர்ப்பு வந்த சில நிமிடங்களிலேயே, மத்திய தணிக்கை வாரியம் (CBFC) அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தது.

சென்சார் போர்டு தரப்பு வழக்கறிஞர், “தனி நீதிபதியின் உத்தரவு வாரியத்தின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது. எனவே, இந்த மேல்முறையீட்டு மனுவை வரும் திங்கள் கிழமை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என முறையிட்டார்.

தலைமை நீதிபதியின் ‘நச்’ பதில்:
சென்சார் போர்டு வழக்கறிஞரின் கோரிக்கையைக் கேட்ட தலைமை நீதிபதி,

“இந்த வழக்கை எப்போது விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்பதை நான் முடிவு செய்து கூறுகிறேன். நீங்களாக ஒரு நாளைத் தீர்மானிக்க முடியாது” எனக் கூறி வழக்கறிஞரின் கோரிக்கையை உடனடியாக ஏற்க மறுத்துவிட்டார். இதனால் ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் இழுபறி நீடிக்கிறது.

ரசிகர்கள் மற்றும் தயாரிப்பாளர் கவலை:
சுமார் 500 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகியுள்ள இந்தப் படம், உலகம் முழுவதும் 5,000 திரையரங்குகளில் இன்று வெளியாக வேண்டியது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் இன்னும் கையில் கிடைக்காததாலும், மேல்முறையீடு நீதிமன்றத்தில் இருப்பதாலும் ரிலீஸ் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய பின் வெளியாகும் விஜய்யின் கடைசிப் படம் என்பதால், அரசியல் ரீதியாகவும் இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

Leave a Comment