வித விதமாக வடை சுடும் பழனிசாமி – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய பாரதிய ஜனதா கட்சியையும், அதிமுகவையும் கடுமையாகச் சாடிப் பேசினார். தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்க நினைக்கும் சக்திகளுக்குத் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என அவர் குறிப்பிட்டார்.

பாஜக இருக்கும் இடத்தில் வளர்ச்சி இருக்காது

தமிழகத்தை அனைத்து நிலைகளிலும் பின்னுக்குத் தள்ள பாஜக முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டிய முதல்வர், “வளர்ச்சிப் பாதையில் செல்லும் மாநிலங்களில் பாஜக தடம் பதிக்க முடியாது; ஒருவேளை அவர்கள் கால்பதித்தால் அங்கு வளர்ச்சி என்பது இருக்காது” எனத் தெரிவித்தார். பிற மாநிலங்களில் நிலவும் சூழலைச் சுட்டிக்காட்டிய அவர்:

மணிப்பூர்இன்னும் அமைதி திரும்பாமல் எரிந்து கொண்டிருக்கிறது. அஸ்ஸாம் & பீகார்: சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளும், கட்டுப்பாடுகளும் அங்கே தலைவிரித்தாடுகின்றன. மகாராஷ்டிராவில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இப்படியான ஒரு பிளவுபட்ட சூழலைத் தமிழகத்தில் உருவாக்க அவர்கள் துடிப்பதாகவும், ஆனால் திராவிட மாடல் அரசு மத நல்லிணக்கத்தைப் பேணி காப்பதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.

ஆன்மீகமும் திராவிட மாடலும்

பாஜகவின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வரலாற்றில் இல்லாத சாதனையாகத் தமிழகத்தில் 4,000 திருக்கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்திருப்பதை முதல்வர் சுட்டிக்காட்டினார். “எப்போது வன்முறையைத் துறந்து வளர்ச்சியைப் பற்றிப் பேசுவீர்கள்?” என பாஜகவிற்கு அவர் நேரடி சவால் விடுத்தார்.

மீனவர் பிரச்சனை மற்றும் மீனவர் பாதுகாப்பு

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதையும், தாக்கப்படுவதையும் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாக அவர் சாடினார். “மீனவர்களைக் காக்க நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன?” என கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்தைப் பற்றிக் குறைசொல்ல பாஜகவிற்குத் தகுதி இல்லை என்றார்.

வடை சுடும் அரசியல் – அதிமுக மீது தாக்கு

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியையும் விட்டுவைக்காத முதல்வர், “மக்களுக்கு 15 லட்சம் தருவதாகக் கூறி வடை சுட்டவர்களைப் போலவே, இப்போது பழனிசாமியும் விதவிதமாக வடை சுட்டு வருகிறார்” எனக் கிண்டல் செய்தார்.

“பாஜக எனும் டப்பா என்ஜினை நம்பி அதிமுகவும், மூழ்கும் கப்பலான அதிமுகவை நம்பி பாஜகவும் இருக்கின்றன. இரண்டு பூஜ்ஜியங்கள் இணைந்தால் விடை பூஜ்ஜியமாகத்தான் இருக்குமே தவிர, அவர்களுக்கு ராஜ்ஜியம் கிடைக்காது.”

Leave a Comment