தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜனவரி 9, 2026) காலை 10.30 மணிக்கு தனது முக்கியத் தீர்ப்பை வழங்குகிறது.
இந்தச் சூழலில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பாஜகவை சீண்டிய செல்வப்பெருந்தகை:
விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் முட்டுக்கட்டை போடுவதன் பின்னணியில் அரசியல் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள செல்வப்பெருந்தகை,
“ஜனநாயகன் படம் இன்னும் வெளியாகாத மர்மம் பாஜக தலைவர்களுக்கு மட்டும்தான் தெரியும். கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராகச் செயல்படும் நிறுவனங்களை வைத்து இந்தப் படம் முடக்கப்படுகிறது,” எனத் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் இன்று நடப்பது என்ன?
இந்தத் திரைப்படத்திற்கு ஏற்கனவே 27 வெட்டுகள் மற்றும் மாற்றங்களுடன் ‘UA 16+’ சான்றிதழ் வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் ஒரு தனிநபர் புகாரால் படம் ‘மறுஆய்வுக் குழுவுக்கு’ (Revising Committee) அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், நீதிபதி பி.டி. ஆஷா இன்று காலை தீர்ப்பு வழங்குகிறார்.
திரைத்துறையில் எதிர்பார்ப்பு:
சுமார் 5,000 திரையரங்குகளில் இன்று வெளியாக வேண்டிய இந்தப் படம், சென்சார் சிக்கலால் ஒத்திவைக்கப்படும் நிலையில் உள்ளது. நீதிமன்றம் தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டால் மட்டுமே இன்று மாலை அல்லது நாளைக்குள் படம் திரைக்கு வர வாய்ப்புள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய பிறகு வெளியாகும் விஜய்யின் கடைசிப் படம் என்பதால், அவரது தொண்டர்களும் ரசிகர்களும் நீதிமன்றத் தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.