தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது கூட்டணி விவகாரம், போதைப்பொருள் புழக்கம் மற்றும் ஆசிரியர்களின் போராட்டம் குறித்து அவர் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார்.
கூட்டணி குறித்து மவுனம் ஏன்?
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்துப் பேசிய பிரேமலதா, “இதுவரை அதிகாரப்பூர்வமாக கூட்டணி குறித்து யாரும் எங்களிடம் பேசவில்லை; எங்களை யாரும் அழைக்கவும் இல்லை. ஆனால், தேமுதிக எந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறதோ, அந்தத் தான் இந்த முறை நிச்சயமாக ஆட்சி அமைக்கும்” என நம்பிக்கையுடன் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் இனி ஒரு கட்சி ஆட்சி என்பதைத் தாண்டி கூட்டணி அமைச்சரவை அமைவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக அவர் கணித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் விவகாரம்:
தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கலாச்சாரம் குறித்து கவலை தெரிவித்த அவர்,
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர்கள் போதைப்பொருள் கலாச்சாரத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.
இதை ஒழிக்க தமிழக அரசு உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ‘மாற்றம் ஒன்றுதான் மாறாது’ – அந்த மாற்றம் வரும் தேர்தலில் நிகழ்ந்து மக்களுக்கு நல்லது நடந்தால் தேமுதிக அதை வரவேற்கும்.
ஸ்தம்பிக்கும் சென்னை: போராட்டங்களுக்குத் தீர்வு என்ன?
சென்னையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து அவர் பேசுகையில், “சமூக நலப் பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டங்களால் சென்னை நகரமே ஸ்தம்பித்து வருகிறது. இவர்களின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாகப் பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.