உயிர் பயத்தில் தமிழக மக்கள்!.. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு ஸ்டாலின் பதில் என்ன? இபிஎஸ் காட்டம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். “சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தவறிய இந்த ஆட்சி நீடிக்கத் தார்மீக உரிமை இல்லை” என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

உயிர் பயத்தில் பொதுமக்கள்:
திருத்தணியில் வடமாநில இளைஞர் மீது சிறுவர்கள் நடத்திய கொடூரத் தாக்குதல் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் போதையில் நடக்கும் வன்முறைகளைச் சுட்டிக்காட்டிய இபிஎஸ் தனது அறிக்கையில்,

“தமிழகத்தில் இன்று சாமானிய மக்கள் வீதியில் நிம்மதியாக நடக்க முடியவில்லை. எப்போது, எங்கு, யார் போதை போதையில் நம்மைத் தாக்குவார்களோ என்ற உயிர் பயத்திலேயே மக்கள் வாழ வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. போதை இளைஞர்களால் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்?” என ஆக்ரோஷமாக வினவியுள்ளார்.

எதற்கு ஆட்சியில் இருக்கிறீர்கள்?
காவல்துறையைத் தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர், போதைப்பொருள் விற்பனையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கத் தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். “போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்கவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் துப்பில்லாத ஒரு அரசு எதற்காக ஆட்சியில் அமர்ந்திருக்க வேண்டும்? நிர்வாகத் திறமையற்ற இந்த விடியா அரசுக்கு மக்கள் உரியப் பாடம் புகட்டுவார்கள்” என்று அவர் காரசாரமாகப் பேசியுள்ளார்.

ஸ்டாலின் மாடல் அரசுக்கு கண்டனம்:
கடந்த சில தினங்களாகவே ‘தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது’ என்று கூறி வரும் எடப்பாடி பழனிசாமி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதே இத்தகைய குற்றங்களுக்குக் காரணம் எனத் தெரிவித்தார். ஸ்டாலின் அவர்கள் தனது ‘திராவிட மாடல்’ ஆட்சியில் சட்டம் ஒழுங்கை பிணவறைக்கு அனுப்பிவிட்டதாகவும் அவர் கிண்டல் செய்துள்ளார்.

அரசியல் சலசலப்பு:
தேர்தல் நெருங்கி வரும் வேளையில், சட்டம் ஒழுங்கு விவகாரத்தை முன்னெடுத்து முதலமைச்சர் ஸ்டாலினை இபிஎஸ் நேரடியாகத் தாக்கிப் பேசுவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப் பொருள் விவகாரத்தில் திமுக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர்கள் கூறி வரும் நிலையில், இபிஎஸ்ஸின் இந்த ‘எதற்கு ஆட்சி?’ என்ற கேள்விக்கு திமுக தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Comment