விஜய் மக்களுக்காக நிப்பேன் என்றார்.. ஆனால் சொந்தக் கட்சிப் பெண்ணையே மதிக்கவில்லையே.. பனையூரில் பரபரப்பு!

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைமை அலுவலகத்தில், கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கட்சிப் பதவி வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்த பெண் நிர்வாகி ஒருவர் விஜய்யின் காரை மறித்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி ‘அஜித்தா’ ஆவேசம்:
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக முக்கியப் பிரமுகர் அஜித்தா. இவர் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து தீவிரமாகப் பணியாற்றி வந்தவர். தற்போது நடைபெற்று வரும் மாவட்டச் செயலாளர் நியமனத்தில் தனக்குப் பதவி வழங்கப்படவில்லை என்பதால் கடும் அதிருப்தியில் இருந்தார். இது குறித்துத் தலைவரிடம் நேரில் முறையிட இன்று பனையூர் அலுவலகம் வந்திருந்தார்.

நிறுத்தாமல் சென்ற கார்:
கூட்டம் முடிந்து விஜய் தனது சொகுசு காரில் வெளியே வந்தபோது, அஜித்தா திடீரென காரின் குறுக்கே நின்று மறித்தார். காரின் கண்ணாடியைத் தட்டித் தனது குமுறலை வெளிப்படுத்த முயன்றார். ஆனால், விஜய்யின் கார் வேகம் குறையாமல், அவரைத் தாண்டிச் சென்றது. இதனால் விரக்தியடைந்த அஜித்தா, அலுவலகம் முன்பே கண்ணீர் விட்டு அழுதது அங்கிருந்தவர்களைக் கலங்கச் செய்தது.

விமர்சனத்தில் விஜய்:
சமீபத்தில் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கூட்டங்களில் பேசிய விஜய், “மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் விஜய் முதல் ஆளாக வந்து நிற்பான்” என்று முழக்கமிட்டிருந்தார். ஆனால், தற்போது அவரது சொந்தக் கட்சி நிர்வாகி, அதுவும் ஒரு பெண் நிர்வாகி கதறி அழுதபடி காரை மறித்தும், அதைக் கண்டுகொள்ளாமல் சென்றது ஏன்? என்று அரசியல் அரங்கில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

“வெளியில் இருப்பவர்களுக்கு உதவி செய்யப் போவதாகச் சொல்லும் விஜய், முதலில் தன் கட்சிக்காரர்களின் குறைகளைக் கேட்க வேண்டும்” எனச் சமூக வலைதளங்களில் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

உட்கட்சிப் பூசலால் தள்ளாடும் தவெக:
ஏற்கனவே திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட அருள்ராஜ் என்பவர் 10 கோடி ரூபாய் பேரம் பேசியதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், தூத்துக்குடி மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தேர்தல் நெருங்கும் வேளையில், தவெக-வுக்குள் வெடித்துள்ள இந்த ‘பதவிப் போர்’ அக்கட்சியின் பிம்பத்தைச் சற்றுச் சிதைத்துள்ளதாகக் கருதப்படுகிறது.

Leave a Comment