தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் எச். ராஜா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை மற்றும் அவரது கடுமையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. திமுக-வின் வீழ்ச்சிக்கு உதயநிதி ஸ்டாலின் தான் காரணமாக இருப்பார் என்று அவர் சாடியுள்ளார்.
குடும்பத்தையும் ஆட்சியையும் அடக்க முடியவில்லையா?
செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, முதல்வர் ஸ்டாலினின் நிர்வாகத் திறனை நேரடியாகக் கேள்வி எழுப்பினார். “தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் நான் ஒன்று கேட்கிறேன். உங்கள் குடும்பத்தையும் உங்களால் அடக்கி வைக்க முடியவில்லை, உங்கள் கட்சியையும் உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை, ஏன்… உங்கள் அரசாங்கத்தையும் உங்களால் அடக்க முடியவில்லை. எதிலுமே உங்களுக்குக் கட்டுப்பாடு இல்லை,” என்று கடுமையாகச் சாடினார்.

உதயநிதி தான் ‘கொள்ளிக்கட்டை’:
தொடர்ந்து பேசிய அவர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். “உங்கள் மகனையாவது கொஞ்சம் அடக்கி வையுங்கள். உங்கள் அரசாங்கத்திற்கு மிகப்பெரிய ‘கொள்ளிக்கட்டையே’ உதயநிதி ஸ்டாலின் தான். அவரது செயல்பாடுகளும் பேச்சுக்களும் உங்கள் ஆட்சிக்கே ஆபத்தாக முடியும்,” என்று எச். ராஜா எச்சரித்தார்.
கிறிஸ்தவ வாக்குகள் – புதிய சர்ச்சை:
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்துப் பேசிய எச். ராஜா, “சிறுபான்மையினரின் வாக்குகள், குறிப்பாகக் கிறிஸ்தவர்களின் வாக்குகள் விஜய் பக்கம் சென்றுவிடக் கூடாது என்பதில் உதயநிதி குறியாக இருக்கிறார். அதைத் தடுப்பதற்காகவே அவர் சில நாடகங்களை ஆடுகிறார்,” என்றும் குற்றம் சாட்டினார்.
திமுக-வின் பதிலடி:
எச். ராஜாவின் இந்தப் பேச்சுக்கு திமுக தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. “எச். ராஜா எப்போதுமே பிரித்தாளும் அரசியலையும், வன்மமான பேச்சையுமே தனது ஆயுதமாகக் கொண்டுள்ளார். உதயநிதி ஸ்டாலினின் மக்கள் செல்வாக்கைக் கண்டு பயந்தே அவர் இப்படிப் பேசுகிறார்” என்று திமுக நிர்வாகிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.