இலங்கையை பதம் பார்த்த ‘டிட்வா’ புயலானது தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நேற்றுடன் முற்றிலும் வலு குறைந்ததாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
புயல் அபாயம் முழுமையாக விலகியிருப்பது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ள போதும், வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளையும் பரவலாக மழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட தமிழ்நாட்டில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது முற்றிலும் வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. இந்தச் சூழலில், தென் இந்தியப் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது.
டிட்வா புயல் வலுவிழந்த போதிலும், அதன் தாக்கமாக இன்று (வியாழக்கிழமை) எட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
புதுச்சேரி மற்றும் காரைக்கால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி
இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், கனமழை எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நாளை (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.