தமிழக வெற்றி கழகத்தின் மாமல்லபுரம் ‘செயல்வீரர்கள்’ கூட்டத்தில், அக்கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய சில தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. விஜய்க்கு எதிராக மற்ற கட்சிகள் வரி ஏய்ப்பு மற்றும் ‘பார்ட் டைம்’ அரசியல் புகார்களை அடுக்கி வரும் வேளையில், விஜய்யின் செல்வாக்கு அரசு அதிகார அமைப்புகளுக்குள்ளும் நீக்கமற நிறைந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
CBI அலுவலகத்தில் 10 அதிகாரிகள் ‘செல்பி’!
சமீபத்தில் கரூர் விசாரணைக்காகத் தவெக தலைவர் விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்திற்குச் சென்றிருந்தார். அந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட ஆதவ் அர்ஜுனா, “நான் சிபிஐ அலுவலகத்திற்குள் நுழையும்போது அங்கே விஜய் இருப்பதைக் கண்டேன். அப்போது அங்கே பணியில் இருந்த அதிகாரிகளும் ஊழியர்களுமாக ஒரு 10 பேர் ஓடிவந்து விஜய்யுடன் உற்சாகமாக செல்பி எடுத்தார்கள். அதைப் பார்த்து நானே ஒரு நிமிடம் ‘ஷாக்’ ஆகிவிட்டேன். விஜய்க்கு எங்கு சென்றாலும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்,” என வியப்புடன் தெரிவித்தார்.
விசில் சின்னம்..தேர்தல் ஆணையத்தில் ஒரு ரசிகர்!
தவெக-வுக்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டது குறித்தும் ஒரு ‘சீக்ரெட்’ தகவலை அவர் உடைத்தார். “கட்சிக்குச் சின்னமே கிடைக்காது எனப் பலரும் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் நமக்கு எப்படி விசில் சின்னம் கிடைத்தது தெரியுமா? தேர்தல் ஆணையத்தில் இருக்கும் ஒரு நேர்மையான அதிகாரி, தீவிர விஜய் ரசிகர். அவர்தான் தன் தலைவர் விஜய்க்காகப் பார்த்துப் பார்த்து இந்தச் சின்னத்தைக் கொடுக்க கையெழுத்திட்டுள்ளார். ‘தளபதி’யை நேசிக்கும் மக்கள் எல்லா இடத்திலும் ‘ஸ்லீப்பர் செல்கள்’ போல இருக்கிறார்கள்,” என்றார்.