மறுபடியும் பூட்டியாச்சு!.. எண்ணெய் கப்பல்களுக்கு நோ என்ட்ரி!.. கச்சா எண்ணெய் விலை தாறுமாறா ஏறப்போகுதா?

துபாய்:
உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் மிக முக்கியமான பாதையான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ (Strait of Hormuz), திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும் மூடப்படுவதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

என்ன நடந்தது?
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறிவிட்டதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இதன் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாகவும், இந்தப் பாதை வழியாக கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு இனி அனுமதியில்லை என்றும் ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

தாறுமாறாக உயருமா பெட்ரோல் விலை?
உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெயில் பெரும் பகுதி இந்த குறுகிய கடல் பாதை வழியாகத்தான் செல்கிறது. தற்போது இந்தப் பாதை மூடப்பட்டுள்ளதால் கப்பல்கள் மாற்றுப் பாதையைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது. இது இந்தியா உட்பட பல நாடுகளின் பெட்ரோல், டீசல் விலையில் எதிரொலிக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

உலக நாடுகள் அதிர்ச்சி:
“திறந்து சில மணி நேரங்களிலேயே ஏன் இந்த திடீர் முடிவு?” என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈரானிடம் கேள்வி எழுப்பியுள்ளன. ஆனால், “இஸ்ரேல் தனது அத்துமீறல்களை நிறுத்தும் வரை இந்தத் தடை தொடரும்” என்பதில் ஈரான் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

ஏற்கனவே போர் பதற்றத்தில் தத்தளிக்கும் மத்திய கிழக்கு நாடுகளில், ஈரானின் இந்த ‘ஹார்முஸ் லாக்’ (Hormuz Lock) விவகாரம் மேலும் நெருப்பை அள்ளிப் போட்டுள்ளது. இதனால் அடுத்த சில நாட்களில் கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment