கை வச்சீங்க… அவ்வளவுதான்!.. டிரம்ப் எச்சரிக்கை பலித்தது.. ஈரான் அரசு அதிரடி யூ-டர்ன்!

ஈரானில் அலி கமெனி அரசுக்கு எதிராகப் போராடிய 800 போராட்டக்காரர்களைத் தூக்கிலிடும் முடிவை ஈரான் அரசு திடீரென நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த மிகக்கடுமையான எச்சரிக்கையே இதற்குக் காரணம் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

டிரம்பின் ‘ரெட் லைன்’ எச்சரிக்கை:
ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் மதக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டங்களை ஒடுக்க ஈரான் அரசு இதுவரை ஆயிரக்கணக்கானோரைக் கைது செய்துள்ளது. இவர்களில் 800 பேருக்கு ‘விரைவு நீதிமன்றங்கள்’ மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்டு, அவை நேற்று நிறைவேற்றப்பட இருந்தன. இந்தத் தகவலை அறிந்த அதிபர் டிரம்ப், ஈரான் அரசுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.

“ஈரான் அரசு தனது சொந்த மக்கள் மீதான வன்முறையை நிறுத்த வேண்டும். கைதான போராட்டக்காரர்களைத் தூக்கிலிட்டால், அது ஒரு ‘சிவப்பு கோட்டை’ (Red Line) தாண்டியதாகக் கருதப்படும். அதன் பின்விளைவுகள் ஈரான் அரசு எதிர்பார்க்காத அளவுக்குப் பயங்கரமானதாக இருக்கும். அமெரிக்கா சும்மா இருக்காது.”

பணிந்ததா ஈரான்?
டிரம்பின் இந்த எச்சரிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே, வெள்ளை மாளிகை ஒரு முக்கியத் தகவலை வெளியிட்டது. ஈரானில் திட்டமிடப்பட்டிருந்த 800 மரண தண்டனைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் உறுதிப்படுத்தினார்.

இது குறித்துப் பேசிய டிரம்ப், “ஈரானில் படுகொலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக எனக்கு நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது. இது நல்ல செய்தி. நாங்கள் தொடர்ந்து கவனிப்போம்” எனத் தெரிவித்துள்ளார். ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சரும், “மரண தண்டனை நிறைவேற்றும் திட்டம் தற்போது ஏதுமில்லை” எனத் தெரிவித்து ஒரு வழியாகப் பின்வாங்கியுள்ளார்.

பின்னணியில் இருக்கும் ராணுவப் பயம்?
டிரம்பின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அமெரிக்கா தனது பி-2 (B-2) ரக குண்டுவீச்சு விமானங்களைத் தயார் நிலையில் வைத்திருந்ததும், ஈரானின் வான் எல்லை சில மணிநேரம் மூடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் நேரடி ராணுவத் தாக்குதலுக்கு அஞ்சியே ஈரான் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உயிர் தப்பிய 800 பேர்:
தூக்குக் கயிற்றின் நுனியில் இருந்த 800 போராட்டக்காரர்களின் உயிர்கள் தற்போது காக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஈரானில் இன்னும் முழுமையான அமைதி திரும்பவில்லை என்பதால், நிலைமையை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.

Leave a Comment