தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அரசியல் ரீதியான அழுத்தங்களுக்கு மௌனம் காப்பது குறித்து நடிகர் மற்றும் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் மற்றும் அவர் மீதான மத்திய அரசின் அணுகுமுறை குறித்து எழுந்த கேள்விக்கு கருணாஸ் அளித்த பதிலடி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
டப்பிங் அரசியல்?
சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடியில் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸிடம், “விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் காலதாமதம் செய்வது மற்றும் அவர் மீதான விசாரணை வளையங்கள் மூலம் பாஜக அவருக்கு அழுத்தம் கொடுக்கிறதா?” என்று கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த கருணாஸ், “இந்தக் கேள்விக்கு விஜய் தான் முதலில் பதில் சொல்ல வேண்டும். ஒரு கட்சியின் தலைவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர், எதற்கெடுத்தாலும் மௌனமாகவே இருந்தால் எப்படி? சினிமாவில் டப்பிங் பேசுவதற்கு மட்டும்தான் வாய் திறப்பேன் என்று சொன்னால் அது அரசியலுக்குச் சரிப்பட்டு வருமா? அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதா இல்லையா என்பதை அவர் தான் மக்களிடம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்,” என்று காட்டமாகக் கூறினார்.
மௌனம் கலைப்பாரா விஜய்?
தொடர்ந்து பேசிய கருணாஸ், “இதற்கு மேலும் வாய் திறக்க மாட்டேன் என்று அடம் பிடித்தால், அது அவரை நம்பி வந்த தொண்டர்களுக்குச் செய்யும் துரோகம். ஒரு தலைவர் என்பவருக்குத் துணிச்சல் மிக முக்கியம். சினிமாவில் நூறு பேரை அடிப்பது மட்டும் வீரமல்ல. களத்தில் இறங்கி மக்கள் பிரச்னைக்காகக் குரல் கொடுப்பதுதான் தலைமைப் பண்பு,” எனத் தெரிவித்தார்.
விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு, அவரது படங்களுக்குத் தணிக்கைக் குழுவில் சிக்கல் ஏற்படுவதும், அவரது கட்சி நிர்வாகிகள் மீது மத்திய விசாரணை கண் வைப்பதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இது விஜய்யை பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் (NDA) இழுப்பதற்கான ஒரு தந்திரமா என்ற விவாதம் தமிழக அரசியலில் பலமாக எழுந்துள்ள நிலையில், கருணாஸின் இந்த விமர்சனம் முக்கியத்துவம் பெறுகிறது.