2026 சட்டமன்றத் தேர்தலை ‘ஜனநாயகப் போர்’ என வர்ணித்து நேற்று விஜய் ஆற்றிய உரைக்கு, நடிகர் மற்றும் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் கடும் பதிலடி கொடுத்துள்ளார். விஜய்யின் ஊழல் எதிர்ப்புப் பேச்சு மற்றும் கட்சியின் ‘விசில்’ சின்னத்தை முன்வைத்து கருணாஸ் எழுப்பியுள்ள கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகின்றன.
வரி ஏய்ப்பு புகாரும்… ஊழல் நாடகமும்!
“ஊழல் இல்லாத அரசியல் செய்வேன்” என்று மேடையில் முழங்கும் விஜய்யை சாடிய கருணாஸ், பழைய கார் வரி விவகாரத்தை மீண்டும் கிளறியுள்ளார். “வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த காருக்கு முறையாக வரி கட்டாமல், அதை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்றதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய வரியைக் கட்டாமல் டிமிக்கி கொடுத்தது ஊழல் நாடகம் இல்லையா? முதலில் தன் கடமையைச் சரியாகச் செய்யாதவர் ஊழலைப் பற்றிப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது” என்று விமர்சித்துள்ளார்.
விசில் சின்னம்..ஊதலாம்… ஆனா ஓட முடியுமா?
தேர்தல் ஆணையம் தவெக-வுக்கு ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது குறித்துப் பேசிய கருணாஸ், “விசில் இருந்தால் அதை வைத்துக்கொண்டு மைதானத்தில் ஓரம் நின்று ஊதத்தான் முடியும். ஆனால், ஓட்டப்பந்தயத்தில் ஓடி முதலிடம் பிடிக்கத் திறமையான வீரர் வேண்டும். 145 நாட்களில் வெறும் 15 முறை மட்டும் வெளியே வந்துவிட்டு, 40% வாக்கு கிடைக்கும் என்று சொல்வது வெறும் சினிமா பில்டப்” என்று கிண்டலடித்துள்ளார்.