அழுத்தத்துக்கு பயப்பட மாட்டீங்களா?.. கைகட்டி நின்ன பிளாஷ்பேக் தெரியாதா?.. விஜய்யை வறுத்தெடுத்த அமைச்சர் நேரு!

நேற்று மாமல்லபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், “நான் எந்த அழுத்தத்திற்கும் பயப்படமாட்டேன்” என தவெக தலைவர் விஜய் ஆவேசமாக முழங்கினார். விஜய்யின் இந்த ‘மாஸ்’ பேச்சுக்கு, திமுகவின் மூத்த அமைச்சரான கே.என். நேரு இன்று திருச்சியில் தனது பாணியில் நறுக்கெனப் பதிலடி கொடுத்துள்ளார்.

அழுத்தத்துக்குப் பயப்படாதவரா விஜய்?
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, “இன்று புதிதாகக் கட்சி ஆரம்பித்துவிட்டு விஜய் வீர வசனம் பேசுகிறார். தான் ஒரு காலமும் அழுத்தத்திற்குப் பயப்பட மாட்டேன் என்று பில்டப் கொடுக்கிறார். ஆனால், ஒரு காலத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இவரும், இவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும் எப்படி கைகட்டி நின்றார்கள் என்பது இந்த ஊருக்கே தெரியும்,” எனத் தனது பேச்சைத் தொடங்கினார்.

‘தலைவா’ படப் பிரச்சனை!
கடந்த காலச் சம்பவங்களை நினைவூட்டிய அமைச்சர், “தனது ‘தலைவா’ சினிமா படத்தை வெளியிட முடியாமல் சிக்கல் வந்தபோது, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இந்த விஜய் எப்படிச் சரணடைந்தார்? ‘முதலமைச்சரே, நான் உங்களுக்கு என்றைக்கும் எதிரி இல்லை’ என்று சொல்லி, அந்த அழுத்தத்திற்குப் பயந்து கைகட்டி நின்றவர்தான் இந்த விஜய். அன்று தனது சினிமா வியாபாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள மண்டியிட்டவர், இன்று வீர வசனம் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது,” என்று விளாசினார்.

சினிமா பிம்பம் எடுபடாது!
சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வந்துவிடலாம், ஆனால் மக்களின் நாடித்துடிப்பு அவர்களுக்குத் தெரியாது எனக் குறிப்பிட்ட அவர், “ஜெயலலிதா முன்னால் மண்டியிட்ட வரலாற்றை மக்கள் மறந்துவிடவில்லை. இன்று அழுத்தத்திற்குப் பயப்பட மாட்டேன் என்று பேசுவது வெறும் சினிமா டயலாக் தான். களத்தில் இறங்கிப் போராடும்போது தெரியும் அழுத்தம் என்றால் என்னவென்று,”

விஜயின் களப்பணி இல்லாத அரசியலை சுட்டிக்காட்டிய திமுக தரப்பு, “அறையில் உட்கார்ந்து அரசியல் செய்யும் நபர், பல தசாப்தங்களாக மக்களுக்காக உழைக்கும் திமுக போன்ற இயக்கங்களை விமர்சிக்கத் தகுதியில்லை” எனத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment