விஜய் திருப்பி அடிக்கத் தொடங்கினால் திமுக தாங்காது! அமைச்சர் திருச்சி வேலுசாமி பகிரங்க எச்சரிக்கை!

”தமிழக அரசியலில் பல ஆண்டுகாலம் உழைத்த சீனியர் தலைவர்களை ஓரம் தள்ளிவிட்டு, நேற்று வந்த உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்கிய திமுக, தவெக தலைவர் விஜய்யை விமர்சிக்கத் தகுதியில்லை” என அமைச்சர் திருச்சி வேலுசாமி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது திமுகவினர் வைக்கும் தனிமனித விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திருச்சி வேலுசாமி பேசியதாவது,

“துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை விட விஜய் எந்த வகையில் மோசம்? திமுக முதன்முதலில் ஆட்சியைப் பிடித்தபோது உதயநிதி பிறக்கவே இல்லை. ஆனால், அன்றிலிருந்து இன்று வரை அந்தத் திராவிடக் கட்சிக்காக அரும்பாடுபட்டு உழைப்பவர் துரைமுருகன். சீனியாரிட்டி அடிப்படையில் பார்த்தால் துரைமுருகனுக்குத்தான் துணை முதல்வர் பதவி கொடுத்திருக்க வேண்டும். ஆனால், நேற்று வந்த உதயநிதியைத் துணை முதல்வர் ஆக்கியபோது திமுகவில் யாரும் ஏன் என்று கேட்கவில்லை.”

விஜய் ஏன் போட்டியாக இருக்கக்கூடாது?:

வாரிசு அடிப்படையில் உதயநிதிக்கு உயர் பதவி கிடைக்கும்போது, மக்களுக்காகக் கட்சி தொடங்கிய விஜய் ஏன் திமுகவிற்குச் சரிசமமாகப் போட்டியாக நிற்கக்கூடாது? என அவர் கேள்வி எழுப்பினார். “திமுக முதலில் தங்கள் கட்சியில் உள்ள சீனியர்களுக்கு முறையான அங்கீகாரம் வழங்கிவிட்டு, அப்புறம் விஜய்யைப் பற்றிப் பேசட்டும். விஜய் மீது தனிமனிதத் தாக்குதல் நடத்துவதைத் திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

திருப்பி அடித்தால் தாங்க மாட்டார்கள்:

மேலும் எச்சரித்த அவர், “தமிழக வெற்றிக் கழகம் மற்றும் விஜய் குறித்துத் தரக்குறைவாக விமர்சனம் செய்வதைத் திமுகவினர் தவிர்க்க வேண்டும். ஒருவேளை தவெக-வினர் திருப்பி விமர்சிக்கத் தொடங்கினால் திமுகவால் அதைத் தாங்க முடியாது. அரசியலில் ஆரோக்கியமான விமர்சனங்கள் மட்டுமே இருக்க வேண்டும்; தனிமனித விமர்சனங்கள் அல்ல” எனத் தெரிவித்தார்.

கூட்டணிக் கட்சியின் அமைச்சரே, திமுகவின் உட்கட்சி விவகாரங்களையும் வாரிசு அரசியலையும் பகிரங்கமாக விமர்சித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment