சிபாரிசு செஞ்சா சீட் கிடைக்கும்னு நினைச்சீங்களா? ஸ்டாலின் கையில இருக்கிறது List இல்லை… அது பல பேரோட அரசியல் Fate.. யாருக்கு சீட்டுன்னு யாருக்கும் தெரியாது… ஏன்னா, இது நேர்காணல் இல்ல, ஸ்டாலினோட ரகசிய ஆபரேஷன்! இந்த முறை சீனியர்களுக்கும் நோ சீட்.. துரைமுருகனுக்கே டவுட்டுன்னா… மத்தவங்க நிலைமை எல்லாம் நினைச்சு பார்த்தா தலை சுத்துது! அறிவாலய அதிரடிகள்..!

தமிழகச் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், ஆளும் திமுக தரப்பில் வேட்பாளர் தேர்வு குறித்த உள்விவகாரங்கள் அறிவாலயத்தையே அதிர செய்து வருகின்றன. முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே ரகசியமாக வேட்பாளர் பட்டியலை தயார் செய்துவிட்டதாக கூறப்படும் நிலையில், இது தெரியாமல் மண்டல பொறுப்பாளர்கள் செய்த அலப்பறைகள் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. தலைவர் நாம் கொடுக்கும் பட்டியலிலிருந்துதான் வேட்பாளர்களை தேர்வு செய்யப்போகிறார் என்று நம்பி, தங்களுக்கு வேண்டியவர்களின் பெயர்களை பரிந்துரைத்து வந்த பொறுப்பாளர்களுக்கு ஸ்டாலினின் மர்மமான மௌனம் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளதாகத் தெரிகிறது.

பல்வேறு தொகுதிகளில் மண்டல பொறுப்பாளர்களுக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் இடையே நடக்கும் இந்த அதிகார போட்டி, மறைமுகமான உள்ளடி வேலைகளுக்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக, அமைச்சர் சக்கரபாணி மடத்துக்குளம் மற்றும் பர்கூர் தொகுதிகளில் தனக்கு வேண்டியவர்களை சிபாரிசு செய்துள்ளதாகவும், பல்லடம் தொகுதியை கூட்டணிக்குத் தள்ளிவிடுவேன் என்று நிர்வாகிகளிடம் பகிரங்கமாக பேசியதாகவும் தகவல்கள் கசிகின்றன. இதேபோல் கடலூரில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும், வடக்கு மண்டலத்தில் எ.வ. வேலுவும் தங்களுக்கு ஆகாதவர்களுக்கு சீட் கிடைத்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக காய்நகர்த்தி வருகின்றனர்.

தொகுதிகளை கூட்டணிக்கு தள்ளிவிடும் அரசியலும் இந்த முறை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. உதாரணமாக, முசிறி தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்குவதற்கான முயற்சிகள் நடந்தபோது, அங்கிருந்த நிர்வாகிகள் முதலமைச்சரை நேரில் சந்தித்து, நமக்கு சாதகமான தொகுதியை கூட்டணிக்குத் தரைவார்த்துவிடாதீர்கள்” என்று ஒற்றை குரலில் முறையிட்டுள்ளனர். இத்தகைய இழுபறிகளால் மாவட்ட செயலாளர்கள் பலரும் அதிருப்தியில் இருக்கும் வேளையில், ஸ்டாலின் யாரிடமும் கலந்தாலோசிக்காமல் தனது தனிப்பட்ட ஆய்வு குழுவின் அறிக்கையை வைத்து இறுதி பட்டியலை எடுத்துவிட்டதாக அறிவாலய வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

வேட்பாளர் பட்டியல் குறித்த ரகசியத்தை ஸ்டாலின் காக்கும் விதம், கட்சியின் மூத்த தலைவரான துரைமுருகனையே பொங்க வைத்துள்ளது. சீட் கேட்டு வந்த ஒருவரிடம், “எனக்கே சீட் இருக்குமா இல்லையா என்று தெரியவில்லை, இதில் உனக்கு நான் எங்கே சிபாரிசு செய்வது?” என்று அவர் எரிந்து விழுந்துள்ளார். ஸ்டாலின் தனது குடும்ப உறுப்பினர்களிடம் கூட இது குறித்து பேச மறுத்து வருவதால், திமுகவின் உயர்மட்ட தலைவர்களே பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். விருப்ப மனு அளித்த பல மூத்த நிர்வாகிகளின் வாரிசுகளை நேர்காணலுக்கு கூட அழைக்காமல் ஸ்டாலின் அதிரடி காட்டியிருப்பது வாரிசு அரசியல் விமர்சனங்களை தவிர்க்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் சீனியர்களுக்கு நோ-சீட் என்ற கொள்கையை ஸ்டாலின் கையில் எடுத்திருப்பதுதான் தற்போதைய மிகப்பெரிய அதிர்ச்சித் தகவல். பல முறை அமைச்சர்களாகவும், எம்.எல்.ஏ-க்களாகவும் இருந்த சீனியர்களுக்கு பதிலாக புதிய முகங்களுக்கும், இளைஞர்களுக்கும் வாய்ப்பளிக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆண்டாண்டு காலமாக தொகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல சீனியர் புள்ளிகள் நமக்குச் சீட் இருக்குமா, இல்லையா? என்ற கவலையில் கிறுகிறுத்து போயுள்ளனர். இது கட்சிக்குள் ஒரு தலைமுறை மாற்றத்திற்கான அறிகுறியாக இருந்தாலும், தேர்தல் நேரத்தில் இது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சமும் நிலவுகிறது.

ஒட்டுமொத்தத்தில், திமுகவின் வேட்பாளர் தேர்வு என்பது ஒரு மர்ம திரைப்படத்தை போல நகர்ந்து கொண்டிருக்கிறது. அன்பாகவும் அதட்டலாகவும் அனைவரின் வாயையும் அடைத்துவிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் தனது இறுதி பட்டியலை வெளியிட தயாராகிவிட்டார். மூத்தவர்களின் அனுபவமா அல்லது புதியவர்களின் வேகமா என்பதில் ஸ்டாலின் எடுத்துள்ள இந்த முடிவு, 2026 தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும். அறிவாலயத்தின் இந்த ரகசிய வியூகம் மற்ற கட்சிகளை வியப்பிலும், சொந்த கட்சியினரை பீதியிலும் ஆழ்த்தியுள்ளது.

Leave a Comment