ரேஷன் கடை கண்ட்ரோல் யார்கிட்ட?.. விஜய்க்கு பாடம் எடுத்த புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்..

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், புதுச்சேரியில் ஆற்றிய அரசியல் உரையில் ரேஷன் கடை விவகாரத்தை மையமாக வைத்து வைத்த விமர்சனம், ஆளும் கட்சியின் முக்கியத் தலைவரான உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தால் கடுமையாக மறுக்கப்பட்டுள்ளது.

“ரேஷன் கடைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா அல்லது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதுகூட தெரியாமல் விஜய் பேசக்கூடாது” என்று நமச்சிவாயம் கேள்வி எழுப்பியுள்ளது புதுச்சேரி அரசியல் தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரேஷன் விநியோக சர்ச்சை :

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை விஜய் விமர்சிக்காத நிலையில், அவர் பொதுவாக எழுப்பிய சில விமர்சனங்களுக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதிலடி கொடுத்துள்ளார்.

நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இலவச அரிசித் திட்டம் மாநில அரசின் ரேஷன் கடைகள் மூலம்தான் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நடைமுறைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை.”

“அரசியல் களத்துக்கு வரும் ஒரு தலைவர், ஒரு திட்டத்தைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு முன், அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா..? அல்லது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா..? என்பதன் அடிப்படையைக் கூட தெரிந்துகொண்டு பேச வேண்டும்” என்று காட்டமாகத் தெரிவித்தார்.

ரங்கசாமிக்கு ஆதரவாகக் குரல் :

விஜய் தனது 11 நிமிடப் பேச்சில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியை விமர்சிக்காமல், தமிழ்நாட்டின் திமுக அரசையும் மத்திய அரசையும் மட்டுமே விமர்சித்துப் பேசியிருந்தார். இந்தச் சூழலில், கூட்டணி ஆட்சியில் உள்ள முக்கிய அமைச்சரான நமச்சிவாயம், விஜய் விமர்சித்த விஷயத்தை சுட்டிக்காட்டி அவருக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

விஜய் என்.ஆர். காங்கிரஸ் அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைக்காத நிலையில், ஆளும் கட்சியில் இருந்தே அவருக்கு முதல் எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment