ஒரு பக்கம் ஆப்கானிஸ்தான் தொல்லை.. இன்னொரு பக்கம் ஈரானின் கண்காணிப்பு.. அமெரிக்கா கொடுக்கும் டார்ச்சர்.. சவுதி அரேபியா கொடுத்த கடனை கேட்பதால் சிக்கல்.. உள்ளூரில் பலுசிஸ்தான் எழுச்சி.. திவாலை நோக்கி செல்லும் பொருளாதாரம்.. ஒரு நாடு எத்தனை பிரச்சனையை தான் சமாளிக்கும்.. பாவம் பாகிஸ்தான் அரசும் மக்களும்..

பாகிஸ்தானின் தற்போதைய அரசியல் மற்றும் ராணுவ சூழலில், பலுசிஸ்தான் மாகாணம் ஒரு மிகப்பெரிய எரிமலையாக வெடிக்க காத்திருக்கிறது. ஈரானுடனான மோதல், ஆப்கானிஸ்தான் எல்லை பதற்றம், ஐக்கிய அரபு அமீரகத்துடனான ராஜதந்திர விரிசல்கள் என பாகிஸ்தான் பல முனை போராட்டங்களை சந்தித்து வரும் வேளையில், பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் மற்றும் பலுசிஸ்தான் தேசிய இராணுவம் ஆகியவற்றின் அதிரடி தாக்குதல்கள் பாகிஸ்தான் ராணுவத்தை நிலைகுலைய செய்துள்ளன.

பலுசிஸ்தான் விடுதலை போராட்டத்தின் வரலாற்றில் இந்த முறை ஒரு மிகப்பெரிய மாற்றம் தெரிகிறது. இதுவரை கொரில்லா தாக்குதல்களை மட்டுமே நம்பியிருந்த பலுசிஸ்தான் போராளிகள், இப்போது வான்வழி தாக்குதல்களிலும் தடம் பதிக்க தொடங்கியுள்ளனர். தரைவழிப் பாதுகாப்புகளை தகர்ப்பது கடினமாக இருந்த சூழலில், மேலிருந்து விழும் இந்த தாக்குதல்கள் பாகிஸ்தான் வீரர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன.

இந்த தாக்குதல்கள் வெறும் ராணுவ ரீதியானவை மட்டுமல்ல, இவை பாகிஸ்தானின் பொருளாதார கனவுகளையும் சிதைத்து வருகின்றன. பலுசிஸ்தானின் தங்கம் மற்றும் தாமிச் சுரங்கத் திட்டமான ‘ரெகோ டிக்’ மூலம் வரும் வருமானத்தை வைத்து தனது உலகளாவிய கடன்களை அடைக்கலாம் என இஸ்லாமாபாத் கணக்கு போட்டிருந்தது. ஆனால், தற்போதைய பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு, இந்த திட்டத்தின் பணிகளை ஓராண்டுக்கு தள்ளிவைப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மறுபுறம், ஆப்கானிஸ்தான் எல்லையிலும் பாகிஸ்தானுக்கு நிம்மதி இல்லை. கடந்த 72 மணி நேரங்களில் தலிபான்கள் பல பாகிஸ்தான் எல்லை சாவடிகளை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஈரானும் தனது எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல்களை கூர்ந்து கவனித்து வருகிறது. பாகிஸ்தான் இப்போது அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே சமரசம் பேசத் துடிப்பது அமைதிக்காக அல்ல, மாறாக மற்றொரு போர்க்களம் திறக்கப்பட்டால் அதை தாங்கும் சக்தி தன்னிடம் இல்லை என்ற பயத்தினால்தான்.

தற்போதைய சூழலில், பாகிஸ்தானிடம் எஞ்சியிருப்பது அதன் அணுஆயுத மிரட்டல் மட்டுமே. ஆனால், பசியால் வாடும் ராணுவமும், திவாலான பொருளாதாரமும் நீண்ட காலம் யுத்தம் செய்ய உதவாது. பலுசிஸ்தான் விரைவில் ஒரு சுதந்திர நாடாக ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலேயே அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 தேர்தலை நோக்கி நகரும் பாகிஸ்தான், பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்ப இந்திய எல்லையில் ஏதேனும் சதி செய்ய முயலலாம் என ராணுவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எது எப்படியோ, பலுசிஸ்தானின் சுதந்திரப் போராட்டமும், பாகிஸ்தானின் பொருளாதார வீழ்ச்சியும் அந்த நாட்டின் சிதைவை நோக்கிய பயணத்தை வேகப்படுத்தியுள்ளன.

Leave a Comment