தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் பவன் கல்யாண். துவக்கத்தில் காதல் கதைகளில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் மாஸ் நடிகராகவும் மாறினார். இவர் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் ஆவார். அரசியலில் ஆர்வம் ஏற்பட்டதால் 10 வருடங்களுக்கு முன்பு ஜனசேனா கட்சி என்கிற அரசியல்கட்சியை துவங்கினார்.
சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பல இடங்களிலும் வெற்றி பெற்று ஆந்திராவின் துணை முதல்வராகவும் மாறி இருக்கிறார். ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார். இதில் பவன் கல்யாணும் கலந்து கொண்டார். அப்போது மோடி அவருடனும், சிரஞ்சீவியுடனும் மிகவும் நெருக்கமாக நடந்து கொண்டார்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், ஆந்திர மக்களின் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நலனுக்காக 26 ஜூன் முதல் தொடர்ந்து 11 நாட்கள் வாராஹி தீக்ஷை விரதம் மேற்கொள்ளவிருக்கிறார்.
பவன் கல்யாண் பல வருடங்களாகவே வாராஹி அம்மனை வழிபட்டு வருகிறார். கடந்த ஜூன் மாதமும் பவன் கல்யாண் வராஹி தேவியை வழிபட்டார். மேலும், வாராஹி விஜய யாத்திரையை தொடங்கி தீட்சை எடுத்தார். தற்போது ஆந்திர மக்களின் நலனுக்காக மீண்டும் அதை செய்யவிருக்கிறார். இந்த வாராஹி தீக்ஷையின் விதிகளை நிறைவேற்றுவது மிகவும் கடினம். ஆனாலும் பவன் கல்யாண் அதை செய்து முடிப்பார் என சொல்லப்படுகிறது.