தமிழக அரசியலில் அடுத்த சூப்பர் மூவ் எது? என்ற கேள்விக்கு, “விஜய் – காங்கிரஸ் கூட்டணி” என்பதுதான் பலரின் பதிலாக இருந்தது. ஆனால், இந்த எதிர்பார்ப்பின் மீது குளிர்ந்த நீரை ஊற்றியிருக்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம்.
எஸ்.ஏ.சந்திரசேகரின் விருப்பம்..?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த ப. சிதம்பரத்திடம், விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், காங்கிரஸ் கட்சி விஜய்யுடன் கூட்டணி சேர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தன் ஆசையைச் சொல்கிறார். ஒரு தந்தையாக அவர் அப்படி ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால், அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் மட்டுமே” என்று ஒரே அடியில் முடித்து வைத்தார்.
திமுக – காங்கிரஸ்!
திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்றும், காங்கிரஸ் கெஞ்சுகிறது என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருவதற்கு ப. சிதம்பரம் மிகக் காட்டமான பதிலடி கொடுத்தார். “திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் மேலிடங்கள் இது குறித்து முறையாகப் பேசி வருகின்றன. நேற்று கூட (புதன்கிழமை) முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்துள்ளது. தொகுதிப் பங்கீடு குறித்து இரு கட்சித் தலைவர்களும் பேசி சரியான முடிவை எடுப்பார்கள். இதில் கெஞ்சுவதற்கு ஒன்றும் இல்லை” என்று விளக்கினார்.
முடிவு இதுதான்!
இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே, விஜய்யின் தவெக (TVK) கட்சிக்கு 15% வாக்குகள் இருப்பதாகச் செய்திகள் வெளியான நிலையில், காங்கிரஸை இழுக்க தவெக முயற்சிப்பதாகப் பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், ப. சிதம்பரத்தின் இந்தத் தெளிவான விளக்கம், காங்கிரஸ் இப்போதைக்கு திமுக கூட்டணியை விட்டு நகரும் எண்ணத்தில் இல்லை என்பதையும், விஜய்யுடன் கூட்டணி என்பது வெறும் ‘ஆசை’ மட்டுமே என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
2026 தேர்தலுக்கு இன்னும் காலம் இருந்தாலும், இப்போதே கூட்டணிக் கணக்குகள் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டன!