வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களத்தில் கூட்டணி குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடலூரில் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ :
தேமுதிக சார்பில் ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ என்ற பிரமாண்டமான மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாடு குறித்து வீடியோ வெளியிட்டுள்ள பிரேமலதா விஜயகாந்த், கட்சித் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பில் அவர் விடுத்த அறிவிப்புதான் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், “அந்த நாளில் (ஜனவரி 9) எல்லோரும் கேட்கும் கேள்விகளுக்கு விடை கிடைத்துவிடும். 2026-ஆம் ஆண்டு யாருடன் கூட்டணி என்பதை இந்த மாநாட்டில் அறிவிப்பேன்,” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி, கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சிகளிடமும், தொண்டர்களிடமும் நிலவி வந்த நிலையில், ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் நடக்கும் மாநாடு, தமிழக அரசியலில் ஒரு முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேமலதா விஜயகாந்தின் இந்த அறிவிப்பு, தமிழகத்தின் இருபெரும் திராவிடக் கட்சிகள் உட்பட, அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் வியூகங்களை வகுக்கும் முன்னரே தேமுதிகவின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.