கௌதம் கம்பீர் நீக்கப்படுவாரா?.. திட்டவட்டமாகப் பதிலளித்த பிசிசிஐ.. ரசிகர்களுக்குக் கிடைத்த ‘கிளியர்’ அப்டேட்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கௌதம் கம்பீர் நீக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வந்த செய்திகளுக்கு, பிசிசிஐ (BCCI) துணைத்தலைவர் ராஜு சுக்லா திட்டவட்டமான விளக்கம் அளித்துள்ளார்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி:
சமீபத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி அடைந்த தோல்வியைத் தொடர்ந்து, கம்பீரின் பயிற்சியாளர் பதவி குறித்து விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மட்டும் வி.வி.எஸ். லக்ஷ்மன் போன்ற ஒரு தனி பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாகச் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்துப் பேசிய பிசிசிஐ துணைத்தலைவர் ராஜு சுக்லா மற்றும் செயலாளர் தேவ்ஜித் சைக்கியா ஆகியோர், “கௌதம் கம்பீரை நீக்கும் எண்ணம் பிசிசிஐ-க்கு துளியும் இல்லை” எனத் தெரிவித்துள்ளனர்.

2027 வரை கம்பீர் தான் ‘பாஸ்’:
இது குறித்து ராஜு சுக்லா வெளியிட்டுள்ள விளக்கத்தில்,
“தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் குறித்து ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் வெறும் கற்பனையே. 2027-ஆம் ஆண்டு வரை அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதுவரை அவரே இந்திய அணியின் பயிற்சியாளராகத் தொடர்வார். இடையில் அவரை மாற்றும் எண்ணம் எதுவும் தற்போது இல்லை.” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

பிசிசிஐ-யின் முழு ஆதரவு:
இந்திய அணி தற்போது ஒரு மாற்றத்தை நோக்கி (Transition Phase) நகர்ந்து வருவதால், பயிற்சியாளருக்குக் கூடுதல் கால அவகாசம் தேவை என்பதை பிசிசிஐ உணர்ந்துள்ளது. மேலும், கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி இந்த ஆண்டு ஆசியக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களை வென்றுள்ளதை பிசிசிஐ சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், 2027-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை முடியும் வரை கௌதம் கம்பீர் இந்திய அணியின் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிற்கும் தலைமைப் பயிற்சியாளராக நீடிப்பார் என்பது உறுதியாகியுள்ளது.

Leave a Comment