அப்பாவி மக்கள் உயிரைவிட எதுவும் பெருசு இல்ல…. கோபத்தில் கொந்தளித்த கவுதம் கம்பீர்!

இந்தியன் பிரீமியர் லீக் 2025 (ஐபிஎல்) தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்று வரலாறு படத்ததை யாரும் மறந்துவிட முடியாது. 18 ஆண்டுகால எதிர்பார்ப்புக்கு ஆர்.சி.பி. அணி இந்த ஆண்டு முற்றுப்புள்ளி வைத்ததை விட அந்த அணியின் வெற்றிக் கொண்டாட்டம் 11 அப்பாவி மக்களின் உயிர்களை பறித்த சம்பவம் பெரும் சோகத்தையும், கடும் விமர்சனங்களையும் குவித்து வருகிறது.

பெரும் எதிர்பார்ப்பு, நீண்ட கால பரிதவிப்பு என பலவகை எண்ண ஓட்டங்களுடன் ஆர்.சி.பி. கோப்பையை வென்ற மகிழ்ச்சி கண்மூடி திறப்பதற்குள் மனதில் நிற்க தவறி விட்டது. 18 ஆண்டுகள் ஏக்கம் முடிவுக்கு வந்ததும், வெற்றிக் கொண்டாட்டம் தொடங்கிய நிலையில், ஆர்.சி.பி. அணி தனது வெற்றியை ரசிகர்களுக்கு அர்ப்பணிக்க ரோடு ஷோ நடத்த முடிவு செய்தது. உடனே இதற்கான முன்னேற்பாடுகளும், அடுத்தடுத்து ரோடு ஷோவும் தொடங்கின. எனினும், சரியான திட்டமிடல் இல்லாதது போல் ரோடு ஷோ பெரும் கூட்ட நெரிசலாக மாறி அப்பாவி பொது மக்கள் (ஆர்.சி.பி. ரசிகர்களும் கூட) 11 பேரின் உயிரை காவு வாங்கியது.

மாநில ஆட்சி மற்றும் காவல் துறை நடவடிக்கை என கூட்ட நெரிசலுக்கு யார் பொறுப்பு, யார் யார் மீது நடவடிக்கை என 11 உயிரிழப்புகளுக்கு பிந்தைய பேச்சுவார்த்தைகள் நீள்கிறது. பெரும் துயரில் முடிந்த வெற்றிக் கொண்டாட்டம் குறித்து முன்னாள் வீரர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பலர் தங்களது கருத்தை முன்வைத்து வருகின்றனர். இந்த வரிசையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆர்.சி.பி. வெற்றிக் கொண்டாட்டம் பொது மக்கள் உயிரை விட பெரிதல்ல என்று காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “ரோடு ஷோக்கள் நடத்தப்பட வேண்டும் என்பதில் நான் எப்போதும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. நான் விளையாடி வந்த காலத்திலும், 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற பிறகு என எப்போதும் என் கருத்து இதுவாகவே இருந்துள்ளது. நாம் ரோடு-ஷோக்களை நடத்தக்கூடாது. பொது மக்கள் உயிர் மிகவும் மேலானது, இதை நான் எப்போதும் வலியுறுத்தி சொல்வேன்.”

“எதிர்காலத்தில் நாம் இன்னும் அக்கறை கொண்டு இதுபோன்ற ரோடு ஷோக்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் மூடப்பட்ட கதவுகளுக்குள் வைத்துக் கொள்ளலாம். தற்போது நடந்திருப்பது மிகவும் கொடூரமான ஒன்று. உயிரை இழந்தவர்கள் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். எதிர்காலத்தில் இப்படியொரு நிகழ்வு நடக்காது என நான் நம்புகிறேன். குடிமக்களாக நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.”

“இத்தகைய நிகழ்வுகளை நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். நம்மால் ரோடு ஷோ நடத்த முடியாது எனில், அதை செய்திருக்கக் கூடாது. 11 பேரின் உயிரை இழந்திருக்கக்கூடாது,” என தெரிவித்தார்.

Leave a Comment