தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பெண் நிர்வாகி அஜிதா தற்கொலைக்கு முயன்ற விவகாரம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்யின் அணுகுமுறை குறித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
பதவி கிடைக்காத ஏமாற்றத்தில் தற்கொலை முயற்சி:
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல், கடந்த சில தினங்களாக மாவட்டச் செயலாளர் பதவி கேட்டுச் சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகம் முன்பு தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கட்சி அலுவலகத்திலிருந்து வெளியே வந்த தலைவர் விஜய்யின் காரை வழிமறித்துத் தனது கோரிக்கையை வலியுறுத்த முயன்றார்.

ஆனால், அங்கு அவருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றும், மாவட்டச் செயலாளர் பதவி வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டதால் மனமுடைந்த அஜிதா, 15-க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
சரத்குமார் வைத்த ‘ஹீரோ’ விமர்சனம்:
இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார் கூறியதாவது, “தனது காரை மறித்த பெண் நிர்வாகியை மதித்து, விஜய் காரிலிருந்து கீழே இறங்கி அவரிடம் என்ன பிரச்சனை என்று கேட்டிருந்தால் விஜய் அன்று நிஜமான ‘ஹீரோ’வாகத் தெரிந்திருப்பார். ஒரு பெண் நிர்வாகி தனது தலைவனைப் பார்க்க அவ்வளவு போராடியும் அவரைப் புறக்கணித்தது முறையல்ல. அன்று விஜய் அவரை மதித்துப் பேசியிருந்தால், அந்தப் பெண் இன்று தூக்க மாத்திரை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க மாட்டார்.”
மருத்துவமனையிலிருந்து வரும் நல்ல செய்தி:
தற்கொலை முயற்சிக்குப் பிறகு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜிதாவுக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, அவர் ஐசியூ-வில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் அஜிதாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இருப்பினும், கட்சித் தலைமை இதுவரை இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதலும், தற்கொலை முயற்சியும் தமிழக வெற்றி கழகத்திற்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.