தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சிகளுக்கிடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யை நோக்கி நாம் தமிழர் கட்சியின் ‘சாட்டை’ துரைமுருகன் விடுத்துள்ள காரசாரமான கேள்விகள் சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளன.
விஜய்க்கு துணிச்சல் இருக்கிறதா?
சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசிய சாட்டை துரைமுருகன், விஜய் பாஜகவை எதிர்க்கத் தயங்குவதாகக் குற்றம் சாட்டினார். அவர் கூறியதாவது,
“விஜய்க்கு தெம்பு, திராணி, துணிச்சல், ஆளுமைத் தன்மை என ஏதாவது ஒன்று இருந்தால், ‘பாஜக அரசு திட்டமிட்டு என்னை பழிவாங்கப் பார்க்கிறது’ என்று ஒருமுறை சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். சிபிஐ விசாரனை ஒருபுறம், சென்சார் போர்டு கெடுபிடிகள் மறுபுறம் என அவருக்கு நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், இவை எதற்கும் அவர் வாய் திறப்பதே இல்லை.”
சத்தியம் செய்து தருகிறேன்:
விஜய்யை தான் ஏன் தொடர்ந்து விமர்சிக்கிறேன் என்பதற்கு விளக்கம் அளித்த அவர், “விஜய் பற்றி எதுக்கு இந்த சாட்டை துரைமுருகன் தினமும் பேசுகிறான் என்று பலர் கேட்கிறார்கள். விஜய் பாஜகவை எதிர்த்து ஒரே ஒரு வார்த்தை விஜய் பேசிவிட்டால், நான் இந்த கணமே அவரைப் பற்றிப் பேசுவதை நிறுத்தி விடுவேன். இதற்காக நான் சத்தியம் கூட செய்து தருகிறேன்,” என அதிரடியாகத் தெரிவித்தார்.
ஒரு பதிவாது போடுவாரா?
விஜய்யின் மௌனத்தை விமர்சித்த அவர், “தன் மீது நடத்தப்படுவது திட்டமிட்டு நடக்கும் சதி என்று விஜய் தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு பதிவாது போடலாம். ஒரு வரி பதிவிடக் கூட அவருக்கு தெம்பில்லை. அப்புறம் எப்படி அவர் மக்களைக் காப்பாற்றப் போகிறார்?” என சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், திமுகவை எதிர்த்துத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், அவர் பாஜகவின் ‘பி-டீம்’ (B-Team) என நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து சாட்டை துரைமுருகன் முன்வைத்துள்ள இந்த “ஆண்மை மற்றும் ஆளுமை” குறித்த விமர்சனங்கள் தவெக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.