தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் (பி.கே.) கூட்டணியை நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளரும், அரசியல் விமர்சகருமான சாட்டை துரைமுருகன் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். பிரசாந்த் கிஷோரின் சொந்த மாநிலத் தோல்வியைச் சுட்டிக்காட்டி, 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்க்கும் இதே நிலைதான் ஏற்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பீகாரில் பிரசாந்த் கிஷோரின் ஆதரவாளர்கள் ‘பி.கே., பி.கே.’ என்று உயிரைக் கொடுத்தும், அவரது ‘ஜன் சுராஜ்’ கட்சி வெறும் 3.2 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்றது என்பதை துரைமுருகன் சுட்டிக்காட்டினார். அதில்,
“இங்கே எப்படி தவெக, தவெக-னு கத்துக்கிட்டு இருந்தாங்களோ.. அதேபோல அங்க பீகாரில் பிரசாந்த் கிஷோர் ஆதரவாளர்கள் ‘பிகே, பிகே’ என்று உயிரை கொடுத்தார்கள். கடைசியில் என்ன ஆச்சு? 3.2 விழுக்காடு. இப்போது தோல்விக்கு நான் பொறுப்பு ஏற்கிறேன் என்று சொல்லி மௌன விரதம் உட்கார்ந்திருக்கிறார்.”

பிரசாந்த் கிஷோர் அடைந்த இந்தத் தோல்வி, தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்காலத்திற்கும் ஒரு முன்னோட்டம் என்றும் அவர் விமர்சித்தார்.
2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நடிகர் விஜய்க்கும் இதேபோன்றதொரு நிலை ஏற்படும் என்று துரைமுருகன் அடித்துச் சொன்னார்.
“சத்தியமாக சொல்கிறேன் 2026 தேர்தல் முடிந்தவுடன் விஜய்யும் கண்டிப்பாக ஒரு மௌன விரதம் எடுப்பார். ‘பிகே’ வியூகம் வகுப்பவர், அவருக்கே பீகாரில் இந்த அடி விழுந்திருக்கே, விஜய்க்கு என்ன அடி விழப்போகிறதோ?”
‘லைட் இல்லாத சைக்கிள்’ – குழியில் விழும் தவெக :
பிரசாந்த் கிஷோரையும், விஜய்யையும் ஒப்பிட்டு அவர் கொடுத்த உதாரணம் மிகவும் கூர்மையாக இருந்தது.
“இருட்டுல ஒருத்தர் சைக்கிள்ல லைட் இல்லாம போனாரு என்றால், பின்னாடி ஒருத்தன் சைக்கிளே இல்லாம வாராரு. அவர் எந்த குழியில் விழப் போறாரோ… பிகேவிற்கே இந்த நிலைமை என்றால், தவெகவிற்கு எந்த அடி விழும்?”
பிரசாந்த் கிஷோர் தனது சொந்த மாநிலத்திலேயே தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், அவரது வியூகங்களை நம்பி அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 தேர்தலில் மிகப்பெரிய தோல்வி நிச்சயம் என்றும், அது ‘பாதாளக் குழியில்’ விழும் அளவுக்கு அபாயகரமானது என்றும் சாட்டை துரைமுருகன் கூறியுள்ளார்.