பள்ளியில் மாணவிகள் மது குடித்து ரகளை.. வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பள்ளி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள ஒரு பள்ளியில், வகுப்பறைக்குள் வைத்து மது அருந்திய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ஆறு மாணவிகளை சஸ்பெண்ட் (தற்காலிக நீக்கம்) செய்து பள்ளி நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பாளையங்கோட்டையை பகுதியில் இயங்கி வரும் ஒரு பள்ளியில் படிக்கும் சில மாணவிகள், வகுப்பறைக்குள் மது அருந்தும் வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாகப் பரவியது. சீருடையில் இருந்த மாணவிகள் பள்ளி வளாகத்திலேயே மது அருந்தியது குறித்துப் பலத்த விமர்சனங்கள் எழுந்தன.

இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பள்ளி நிர்வாகம் நடத்திய உடனடி விசாரணையில், ஒன்பதாம் வகுப்பு பயிலும் ஆறு மாணவிகள் இந்தச் செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் ஒழுங்கீனமான முறையில் நடந்துகொண்டதற்காக அந்த ஆறு மாணவிகளையும் சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சிகிச்சை மற்றும் கவுன்சிலிங் : 

சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவிகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தவறான பழக்கவழக்கங்களில் இருந்து விடுபட கவுன்சிலிங் (ஆலோசனை) வழங்கவும், தேவைப்பட்டால் மருத்துவச் சிகிச்சை அளிக்கவும் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தச் சம்பவத்தில் மாணவிகளின் பெற்றோரையும் பள்ளி நிர்வாகம் அழைத்து, நிலைமையின் தீவிரத்தை எடுத்துரைத்துள்ளது.

சமூகத்தில் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் சமீபகாலமாக ஒழுக்க மீறல்கள் அதிகரிப்பது கவலையளிக்கும் வகையில் இருப்பதால், இந்தச் சம்பவம் கல்வி வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. மாணவர்களின் நடத்தையை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து கல்வி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Comment