தமிழக அரசியல் களத்தில் அதிமுக-விற்கும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கும் (TVK) இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது வழக்கமான மதுரை பாணியில் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அவங்க திட்டுனா நாங்க சும்மா இருப்போமா?
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜுவிடம், அதிமுக தலைவர்கள் சமீபகாலமாக விஜய்யை ஏன் கடுமையாகத் தாக்கிப் பேசுகிறார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நாங்கள் யாரையும் தேவையில்லாமல் திட்டவில்லை. சகோதரர் விஜயை நாங்களாகப் போய் வம்பிழுக்கவில்லை. ஆனால், அவர்கள் எங்களை நோக்கி விமர்சனங்களை வைக்கும்போது, நாங்கள் திருப்பித் திட்டாமல் அமைதியாக இருக்க முடியுமா? அவர்கள் ஆரம்பித்தால் நாங்கள் திருப்பித் தான் கொடுப்போம்” என ஆவேசமாகத் தெரிவித்தார்.
அறை அரசியல் வேலைக்கு ஆகாது!
விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் குறித்துக் கிண்டலாகப் பேசிய செல்லூர் ராஜு, “அரசியல் என்பது வெறும் திரையில் தோன்றுவது போன்றது அல்ல. அவர் பாட்டுக்கு ஒரு அறையிலேயே உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்தால் எப்படி முடியும்? ஒரு கட்சித் தலைவராக இருப்பவர் வீதிக்கு வர வேண்டும், மக்களைச் சந்திக்க வேண்டும், களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு ‘ரூம்’ பாலிடிக்ஸ் செய்தால் அரசியலில் ஜெயிக்க முடியாது” எனத் தனது பாணியில் குத்திக்காட்டினார்.
எடப்பாடியாரை விமர்சிப்பதா?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தவெக நிர்வாகிகள் விமர்சிப்பது குறித்துப் பேசிய அவர், “அதிமுக என்பது பல போராட்டங்களைக் கடந்து வந்த இயக்கம். எடப்பாடியார் ஒரு சாதாரணத் தொண்டனாக இருந்து இந்த இடத்திற்கு வந்தவர். அவரைப் பற்றி விமர்சிக்க இப்போது வந்தவர்களுக்குத் தகுதி இல்லை” எனத் தெரிவித்தார்.
ஏற்கனவே ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக்கணிப்பில் விஜய் 15% வாக்குகள் பெறுவார் எனச் சொல்லப்பட்ட நிலையில், செல்லூர் ராஜுவின் இந்த “அறை அரசியல்” விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.