அதிமுக-வில் ஒற்றைத் தலைமை விவகாரத்திற்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்ட நிலையில், மீண்டும் அவர் கட்சியில் இணையப் போவதாகப் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், ஓபிஎஸ்-ஸின் இந்த நகர்வுகள் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது பாணியில் காரசாரமாக விமர்சித்துள்ளார்.
மீடியா வழியா தான் மெசேஜ் சொல்லணுமா?
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜுவிடம், ஓபிஎஸ் மீண்டும் அதிமுக-வில் இணைய விருப்பம் தெரிவிப்பது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “அதிமுக-வில் தன்னைச் சேர்க்குமாறு ஓபிஎஸ் கேட்பதற்கு ஒரு முறை இருக்கிறது. அதை விடுத்து ஊடகங்கள் வழியாகத்தான் கேட்க வேண்டுமா? அதிமுக-வில் பல காலம் இருந்து, ஒருங்கிணைப்பாளராகப் பதவி வகித்தவருக்கு எடப்பாடியாரையோ அல்லது தலைமைக்கழகத்தையோ எப்படித் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரியாதா?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
இது வெறும் ‘நாடகம்’ தான்!
ஓபிஎஸ்-ஸின் செயல்பாடுகளை ஒரு நாடகம் எனச் சாடிய செல்லூர் ராஜு, “ஓ.பன்னீர்செல்வம் இப்போது செய்வது எல்லாம் வெறும் நடிப்பு. அவர் நடத்துகிற இந்த நாடகங்களைப் பார்த்துத் தொண்டர்களும் மக்களும் சலித்துப் போய்விட்டார்கள். அவர் எப்போதுமே இப்படித்தான் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி நாடகம் நடத்துவார். இப்போது மீண்டும் அதிமுக-வுக்குள் வரத் துடிப்பது மக்களிடையே எடுபடாது” எனத் தெரிவித்தார்.
அதிமுக-வில் இடமில்லை:
அதிமுக-வில் ஓபிஎஸ்-ஐ மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய செல்லூர் ராஜு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி மிகவும் வலுவாக இருப்பதாகவும், பொதுக்குழு முடிவுகளின்படி தலைமை செயல்பட்டு வருவதாகவும் கூறினார். ஊடக வெளிச்சத்திற்காகவே ஓபிஎஸ் இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
2026 தேர்தலுக்கு அதிமுக தயாராகி வரும் நிலையில், ஓபிஎஸ்-ஸை மீண்டும் சேர்ப்பது தொடர்பான செல்லூர் ராஜுவின் இந்தத் திட்டவட்டமான பேச்சு, அதிமுக – ஓபிஎஸ் அணிகள் இணைவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்பதையே காட்டுகிறது.