தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் முன்னாள் மூத்த தலைவரும் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகியுமான செங்கோட்டையன் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இழவு வீட்டு அழுகையை விட மோசம்!
சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், செங்கோட்டையன் அதிமுகவை விட்டு விலகிய சூழல் குறித்துப் பேசுகையில் மிகவும் அதிரடியான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், “செங்கோட்டையன் அண்ணன் அதிமுகவை விட்டு வெளியே போகும் முடிவை எடுத்துவிட்டு என்னிடம் சொல்லிவிட்டுத்தான் போனார். நீண்ட நாட்களாகவே என்னை விஜய் கட்சிக்கு (தமிழக வெற்றிக் கழகம்) அழைத்துக் கொண்டிருந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) உறுதியாவதற்கு முன்பு வரை என்னிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்,” எனத் தெரிவித்தார்.
மேலும், செங்கோட்டையன் தன்னை தவெக-விற்கு அழைக்கப் பயன்படுத்திய உணர்ச்சிகரமான முறையையும் டிடிவி தினகரன் வெளிப்படையாகச் சொன்னார்.
“விஜய்யை நம்பி நான் போயிட்டேன், ப்ளீஸ் நீங்களும் வந்துடுங்க என அண்ணன் செங்கோட்டையன் என்னிடம் கெஞ்சினார். இழவு வீட்டில் பெண்கள் கூட அப்படி அழ மாட்டார்கள், அப்படி அழுது என்னைக் கூப்பிட்டார். ஆனால், கூட்டணி அறிவிக்கப்பட்ட பிறகு நான் போன் செய்தபோது அவர் எடுக்கவே இல்லை,” எனச் சாடினார்.
அதிமுக டூ தவெக: பின்னணி என்ன?
கடந்த சில மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், உடனடியாகத் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
அதிமுகவின் தூண்களில் ஒருவராகக் கருதப்பட்ட அவர், விஜய் கட்சிக்குச் சென்றது ஏற்கனவே விவாதப் பொருளாக இருந்த நிலையில், அவர் டிடிவி தினகரனையும் அக்கட்சிக்கு இழுக்க முயற்சித்தார் என்பதும், அதற்காக அவர் ‘கண்ணீர் விட்டு கெஞ்சினார்’ என்பதும் தற்போது புதிய அரசியல் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
மௌனம் காக்கும் செங்கோட்டையன் தரப்பு:
டிடிவி தினகரனின் இந்தப் பரபரப்பான குற்றச்சாட்டு குறித்து செங்கோட்டையன் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான பதில்கள் ஏதும் வரவில்லை. எனினும், தவெக-வின் மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வரும் அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் வெற்றிக்காகத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.