விஜய் கூட கூட்டணின்னு சொன்னாலே டெல்லியில இருந்து வர்றாங்க.. செங்கோட்டையன் சொல்லாமல் சொன்ன அந்த ‘பெரிய’ மேட்டர் என்ன?

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) அதிமுக கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், தவெக-வின் முக்கிய நிர்வாகியும் அதிமுக முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் வெளியிட்டுள்ள தகவல் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

டெல்லி கொடுக்கும் நெருக்கடி?
கோயம்புத்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையனிடம், தவெக – அதிமுக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “கூட்டணி குறித்து யாராவது பேசினாலே உடனே டெல்லியில் இருந்து (பாஜக மேலிடம்) ஆட்கள் வந்துவிடுகிறார்கள். எங்களுக்கு எவ்வளவு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்பது எங்களுக்குத்தான் தெரியும். அதை நான் வெளியில் சொல்லாமல் இருக்கும் வரை தான் நல்லது,” என்று பேசினார்.

திணறும் அதிமுக – குழப்பத்தில் தொண்டர்கள்!
தற்போது அதிமுகவில் இருந்து விலகி தவெக-வின் உயர்மட்டக் குழு ஒருங்கிணைப்பாளராக இருக்கும் செங்கோட்டையன், அதிமுகவின் தற்போதைய நிலையைத் தெள்ளத்தெளிவாகப் போட்டு உடைத்துள்ளார்.

விஜய்யுடன் அதிமுக இணைய வேண்டும் என்று அக்கட்சியின் ஒரு தரப்பினர் விரும்பினாலும், டெல்லி அதற்கு முட்டுக்கட்டை போடுவதை அவரது பேச்சு உறுதிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

“டிடிவி தினகரன் கூட தவெக-வுடன் கூட்டணி அமைக்கவே விரும்பினார், ஆனால் சூழ்நிலை காரணமாக அவர் முடிவெடுத்துள்ளார்” என்றும் செங்கோட்டையன் இதன்போது குறிப்பிட்டார்.

விஜய் தனித்துப் போட்டியா?
விஜய் தரப்பில் இருந்து “நாங்கள் தனித்துத்தான் போட்டி” என்ற சிக்னல்கள் வந்தாலும், அதிமுக போன்ற பலமான கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே 2026-ல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் கருதுகின்றன. ஆனால், செங்கோட்டையன் சொல்வது போல ‘டெல்லி அழுத்தம்’ இருக்குமானால், அதிமுகவால் சுதந்திரமாக முடிவெடுக்க முடியுமா என்பது கேள்விகுறிதான்.

Leave a Comment