அதிமுகவை “அடிமை கட்சி” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், அதற்கு மிகவும் சுவாரஸ்யமான முறையில் பதிலடி கொடுத்துள்ளார் பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை.
விமர்சனத்தை ஏற்றுக்கொண்ட அண்ணாமலை:
சமீபத்தில் திமுக மகளிரணி மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “அதிமுக மற்றும் பாஜக-வை அடிமை கூட்டணி” என விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் கோவையில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, யாரும் எதிர்பார்க்காத ஒரு விளக்கத்தை அளித்தார். அவர் கூறியதாவது,
“முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுகவை அடிமை கட்சி என்று சொல்கிறார். ஆமாம், நான் அதை ஒத்துக்கொள்கிறேன். அதிமுக அடிமை கட்சி தான். ஆனால் யாருக்குத் தெரியுமா? தமிழக மக்களுக்குத் தான் அதிமுக அடிமை. மக்களை எஜமானர்களாக நினைத்து அவர்களுக்குப் பணியாற்றும் ஒரு கட்சிதான் அதிமுக.”
மக்களே எஜமானர்கள்:
அதிமுக மற்றும் NDA கூட்டணியின் மக்கள் பணிகளை விளக்கிய அவர், “மக்களை எஜமானர்களாகக் கொண்டு அவர்களுக்கு ஊழியர்களாகப் பணியாற்றுவதை ஒரு பதக்கமாக எங்கள் நெஞ்சில் அணிந்து கொள்வோம். தமிழ்நாட்டு மக்களுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (NDA) அடிமைதான். ஆனால், திமுக-வைப் பொறுத்தவரை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று அவர்கள் எப்போதும் நினைக்க மாட்டார்கள்,” எனத் தெரிவித்தார்.
திமுக-விற்குப் பதிலடி:
யாரோ ஒரு குடும்பத்திற்கு அடிமையாக இருப்பதை விட, கோடிக்கணக்கான மக்களுக்கு அடிமையாக இருந்து அவர்களுக்குச் சேவை செய்வது மேலானது என மறைமுகமாக திமுக-வைச் சாடினார். அண்ணாமலையின் இந்தத் திடீர் விளக்கம், திமுக-வின் “அடிமை” என்ற விமர்சனத்தின் வீரியத்தைக் குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.