தமிழகத்தில் ஆளும் தி.மு.க. மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் இலக்குகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் இருப்பதாகவும், அவரது கட்சியே கரைந்து வருவதாகவும் சாடியுள்ளார்.
முதலமைச்சர் இலக்கை மிஞ்சும் ஈ.பி.எஸ் :
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டிய இலக்கு குறித்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “வெல்வோம் 200, படைப்போம் வரலாறு” என்று தொண்டர்களுக்கு இலக்கு நிர்ணயித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில், அ.தி.மு.க. 210 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.
இதைக் குறிப்பிட்டு அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது:
“முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ‘வெல்வோம் 200’ என்று இலக்கு சொன்னால், எடப்பாடி பழனிசாமி 210 தொகுதிகள் என்று சொல்லி வருகிறார். ஒருவேளை தி.மு.க. 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறியிருந்தால், அவர் அதற்கு மேலும் 10 சேர்த்து 244 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று சொல்லி இருப்பார். நல்ல வேலை 264 தொகுதிகள் மொத்த தொகுதிகள் என்று சொல்லாமல் விட்டுவிட்டார்.”
கரையான் புற்றுபோல் கரையும் அ.தி.மு.க
எடப்பாடி பழனிசாமியின் இந்தக் கூற்று, விரக்தியின் வெளிப்பாடு என்றும் அவர் விமர்சித்தார்:
“அ.தி.மு.க. என்பது கரையான் புற்றுபோல் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொண்டிருக்கிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் உள்ளார். அவரும் பழுத்த அரசியல்வாதிதான். ஆனால், அ.தி.மு.க.வின் தற்போதைய நிலை அவரை இப்படிப் பேச வைக்கிறது.”
தி.மு.க.வை விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமி, தனது கட்சியில் ஏற்பட்டிருக்கும் பிளவுகள் மற்றும் உட்கட்சிப் பூசல்களைச் சரிசெய்வதில் அக்கறை காட்டவில்லை என்றும் அமைச்சர் சேகர் பாபு மறைமுகமாகக் குற்றம் சாட்டினார். தமிழக அரசியலில் தி.மு.க. – அ.தி.மு.க. இடையேயான வார்த்தைப் போர் தற்போது இலக்கு நிர்ணயம் செய்யும் அளவிற்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.