தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் இன்று (டிசம்பர் 9, 2025) ஆற்றிய 11 நிமிட அரசியல் உரையில், புதுச்சேரியின் ஆளும் கட்சியான என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியையோ, முதலமைச்சர் ரங்கசாமியையோ ஒருமுறைகூட விமர்சிக்கவில்லை. மாறாக, தமது உரையில் மத்திய அரசையும், தமிழ்நாட்டின் திமுக அரசையும் மட்டுமே கடுமையாக விமர்சித்திருப்பது, புதுச்சேரி அரசியலில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பொதுவாக, ஒரு புதிய அரசியல் கட்சி பிரவேசிக்கும்போது, அந்த மாநிலத்தில் ஆளும் கட்சியை விமர்சிப்பது வழக்கம். ஆனால், விஜய் இந்தச் சமரசம் செய்திருப்பது அரசியல் களத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் விநியோகம், விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு விஜய், திமுக அரசைக் கடுமையாகச் சாடினார். அதேபோல், மத்திய அரசின் கொள்கைகளையும் விமர்சனம் செய்தார்.
விஜய் மௌனம்:
ஆனால், புதுச்சேரியில் நிலவும் ரேஷன் கடைகள் விவகாரம், அரசு ஊழியர்கள் பிரச்சினை, நிதிப் பற்றாக்குறை போன்ற எவ்வித விவகாரங்கள் குறித்தும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியையோ அல்லது ரங்கசாமியையோ நேரடியாக விமர்சிக்க அவர் விரும்பவில்லை.
அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்று ஏற்கனவே விஜய் அறிவித்திருந்தாலும், பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ரங்கசாமியின் ஆட்சியை அவர் பாராட்டிக் பேசியிருப்பது, எதிர்காலத்தில் புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸுடன் த.வெ.க. கூட்டணி வைக்கத் திட்டமிடுகிறதா? என்ற யூகங்களுக்கு வித்திட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே, ரங்கசாமியுடன் த.வெ.க. கூட்டணி வைப்பது குறித்து அவ்வப்போது யூகங்கள் வெளியாகி வந்தன. இந்தச் சூழலில், கூட்ட அனுமதி பெறுவதில் தொடங்கி, மேடையில் பேசுவது வரை விஜய் என்.ஆர். காங்கிரஸ் அரசுக்கு எதிராகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல், பாராட்டிப் பேசியிருப்பது, கூட்டணிக்கு சாதகமாக வழங்குவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
விஜய்யின் இந்தப் பேச்சு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டிப் புதுச்சேரியில் வலுவான ஒரு புதிய அரசியல் கூட்டணி அமைவதற்கான முதல் கட்டமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.