தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரும் வேலை தேடி சென்னை போன்ற பெருநகரங்களுக்கு இடம்பெயரக் கூடாது என்ற இலக்கோடு, தமிழக அரசு அதிரடியான ஒரு மாஸ்டர் பிளானை கையில் எடுத்துள்ளது. இதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிப்காட் (SIPCOT) தொழில் பூங்காக்கள் மற்றும் டைடல் (TIDEL) பார்க் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
மதுரைக்கு இந்த ஆண்டே ‘ஸ்பெஷல்’ பரிசு!
மதுரை, திருச்சி மற்றும் ஓசூர் ஆகிய மூன்று முக்கிய நகரங்களிலும் தலா 5 லட்சம் சதுர அடிக்கு மேல் பிரம்மாண்டமான பரப்பளவில் மெகா டைடல் பார்க்குகள் கட்டப்பட்டு வருகின்றன.
மதுரை அப்டேட்:
மதுரை மாட்டுத்தாவணி அருகே 13 தளங்களுடன் கட்டப்பட்டு வரும் இந்த பிரம்மாண்ட டைடல் பார்க் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன. இதன் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிந்து இந்த 2026-ம் ஆண்டிலேயே (ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள்) மதுரையின் இந்த ஐடி கனவு நனவாகும் எனத் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
ஊருக்கொரு ‘மினி’ டைடல் பார்க்:
பெரிய நகரங்கள் மட்டுமன்றி, 2-ம் கட்ட மற்றும் 3-ம் கட்ட நகரங்களிலும் ஐடி வேலைகளைக் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ‘டைடல் நியோ’ (TIDEL Neo) என்ற பெயரில் மினி டைடல் பார்க்குகள் கட்டப்பட்டு வருகின்றன.
2030 டார்கெட்:
வரும் 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு மினி டைடல் பார்க்காவது இருப்பதை அரசு உறுதி செய்ய உள்ளது.
ஏற்கனவே சேலம், தஞ்சாவூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் இவை செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், தற்போது கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர் போன்ற மாவட்டங்களிலும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சிப்காட் – இனி எல்லா மாவட்டத்திலும்!
தொழில்துறை வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்ற, மாவட்டந்தோறும் சிப்காட் தொழில் பூங்காக்களை அமைக்க அரசு நிலங்களை ஒதுக்கி வருகிறது. இதன் மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கு அந்தந்த மாவட்டத்திலேயே உற்பத்தித் துறையிலும் (Manufacturing) வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கப் போகிறது.
“இனி படிச்சு முடிச்சிட்டு பெட்டி படுக்கையைத் தூக்கிக்கிட்டு சென்னைக்கோ பெங்களூருக்கோ போக வேண்டிய அவசியமில்லை, நம்ம ஊர்லயே கைநிறைய சம்பளத்தோட வேலை பார்க்கலாம்” என்பதே தமிழக அரசின் இந்தத் திட்டங்களின் சாராம்சம்.